வாங்கிய கடனை திருப்பி கொடுக்காத நபரை காரில் கடத்தி சென்ற கும்பல்!
விழுப்புரம், 28 அக்டோபர் (ஹி.ச.) விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள வளத்தியைச் சேர்ந்த சிவா என்பவர் வட்டிக்கு பணம் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வட்டிக்கு வாங்கிய பணத்தை திருப்பி தராமல் சிவா இழுத்தடித்து வந்த நிலையில் பணம் கொடுத்த
Kidnap


விழுப்புரம், 28 அக்டோபர் (ஹி.ச.)

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள வளத்தியைச் சேர்ந்த சிவா என்பவர் வட்டிக்கு பணம் வாங்கியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் வட்டிக்கு வாங்கிய பணத்தை திருப்பி தராமல் சிவா இழுத்தடித்து வந்த நிலையில் பணம் கொடுத்த நபர் 5 பேருடன் இன்று காலை வளத்தியில் உள்ள சிவாவின் வீட்டிற்கு சென்று பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளார்.

அப்போது பணத்தை திருப்பி தர கால அவகாசம் வழங்குமாறு கேட்ட சிவாவை, தங்களுடன் வந்து எழுதி தந்துவிட்டு செல்லமாறு கூறி அவரது காரிலேயே சிவாவை ஏற்றி கொண்டு 5 பேர் கொண்ட கும்பல் கடத்தி சென்றுள்ளது.

இதனையறிந்த சிவாவின் மனைவி, தனது கணவரை சிலர் காரில் கடத்தி செல்வதாக வளத்தி காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து சிவாவை கடத்தி சென்ற காரை போலீசார் பின் தொடர்ந்து சென்றதோடு, கார் செல்லும் திசைகளில் உள்ள போலீசாரும் உஷார்படுத்தப்பட்டனர்.

இந்நிலையில் சிவாவை கடத்தி வந்த கார், விழுப்புரம் நான்குமுனை சந்திப்பு சாலையில் வந்த போது அங்கு போலீசார் நின்று கொண்டிருப்பதை அறிந்த கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள், உடனே காரை வந்த வழியிலேயே திருப்பி தவறான பாதையில் மின்னல் வேகத்தில் காரை ஓட்டி சென்றனர்.

அப்போது எதிரே வந்த இருச்சக்கர வாகனங்களை இடித்து தள்ளியபடி மின்னல் வேகத்தில் சென்ற காரை போலீசார் துரத்தி சென்றனர். போலீசார் துரத்தி வருவதையறிந்த கடத்தல் கும்பல், விழுப்புரம் புறவழிச்சாலையில் ஜானகிபுரம் என்ற இடத்தில் காரையும், சிவாவையும் விட்டு விட்டு வேறு ஒரு காரில் ஏறி தப்பி சென்றனர்.

இதனைத்தொடர்ந்து சிவாவையும், அவரது காரையும் மீட்டு தற்போது போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடத்தல் கும்பல் ஒட்டி சென்ற கார் மோதியதில் 6 இருச்சக்கர வாகனங்கள் சேதமடைந்தது.

அதனை ஓட்டி சென்றவர்கள் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

விழுப்புரத்தில் சினிமா பாணியில் அரங்கேறியுள்ள இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பும், பதற்றமும் நிலவி வருகிறது.

Hindusthan Samachar / ANANDHAN