Enter your Email Address to subscribe to our newsletters

டாக்கா, 28 அக்டோபர் (ஹி.ச.)
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது.
இதில் முதலில் நடந்த ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வங்காளதேசம் கைப்பற்றியது. இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் நேற்று தொடங்கியது.
நேற்று நடைபெற்ற முதல் போட்டிக்கான டாசில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 165 ரன்கள் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அதிகபட்சமாக ஷாய் ஹோப் 46 ரன் எடுத்தார். வங்காளதேசம் தரப்பில் தஸ்கின் அகமது 2 விக்கெட் எடுத்தார்.
தொடர்ந்து 166 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் களம் இறங்கியது.
வங்காளதேசத்தின் தொடக்க வீரர்களாக சைப் ஹாசன் மற்றும் தன்சித் ஹசன் தமீம் ஆகியோர் களம் கண்டனர். இதில் சைப் ஹாசன் 8 ரன்னிலும், தன்சித் ஹசன் தமீம் 15 ரன்னிலும் அவுட் ஆகினர்.
தொடர்ந்து களம் இறங்கிய லிட்டன் தாஸ் 5 ரன், தவ்ஹித் ஹ்ரிடோய் 28 ரன், ஷமீம் ஹொசைன் 1 ரன், நூருக் ஹசன் 5 ரன் எடுத்து அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இதையடுத்து தன்சிம் ஹசன் சகிப் மற்றும் நசும் அகமது ஜோடி சேர்ந்தனர். இருவரும் அதிரடியாக ஆடி ரன்கள் சேர்த்தனர்.
இதில் தன்சிம் ஹசன் சகிப் 33 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இறுதியில் வங்காளதேச அணி, 19.4 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 149 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.
இதன் மூலம் 16 ரன் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது.
வங்காளதேசம் தரப்பில் அதிகபட்சமாக தன்சிம் ஹசன் சகிப் 33 ரன் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜெய்டன் சீல்ஸ், ஹோல்டர் தலா 3 விக்கெட் வீழ்த்தினார்.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என வெஸ்ட் இண்டீஸ் முன்னிலையில் உள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி20 போட்டி நாளை (29ம் தேதி) நடக்கிறது.
Hindusthan Samachar / JANAKI RAM