Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 29 அக்டோபர் (ஹி.ச.)
சென்னை பனையூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகக் குழுக் கூட்டம் இன்று (அக் 29) நடைபெற்றது. கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், நிர்வாகக் குழு உறுப்பினர்கள், கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் தவெக தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்வுகளை மீண்டும் தொடங்குவது, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், தேர்தல் சின்னம் தொடர்பான ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
கூட்டத்திற்கு பின்பு அக்கட்சியின் இணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
தவெகவின் முதல் நிர்வாகக் குழுக் கூட்டம் இன்று பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. 2026-ல் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அடுத்தக்கட்ட கட்சிப் பணிகள் மற்றும் தேர்தல் பணிகள் குறித்து இக்குழுவில் விவாதிக்கப்பட்டது.
விஜய்யின் அடுத்தக்கட்ட சுற்றுப்பயணம் குறித்து விரைவில் அறிவிக்கப்படும். நீதிமன்றத்தின் அனுமதிக்காக காத்திருக்கிறோம்.
கரூர் சம்பவத்தையொட்டி, மக்களை சந்திக்க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்பட அனைவரும் காத்திருந்தோம். ஆனால் அதற்கான அனுமதி வழங்கப்படவில்லை. எங்களுக்கு கிடைத்த தகவல் படி அனைத்து ரோடுகளும் தடை செய்யப்பட்டது. தவெக கொடி கட்டிய எந்த வாகனத்தையும் போலீஸார் அனுமதிக்கவில்லை. கரூர் சம்பவத்தன்று அனைத்து நிர்வாகிகளும் தாக்கப்பட்டு வெளியேற்றப்பட்டனர்.
அந்த நாள் இரவு எத்தனை அமைச்சர்கள் அங்கே வந்து நாடகம் நடத்தினார்கள் என்பதை நீங்களே பார்த்திருப்பீர்கள். பிரேத பரிசோதனையை உடனடியாக முடித்து விட்டதாக தகவல் கிடைத்தது. கண்டிப்பாக இங்கே எங்களுக்கு எந்தவொரு நீதியும் கிடைக்காது என்பதை உணர்ந்து கொண்டோம். எங்களின் குற்றச்சாட்றே காவல்துறையின் மீதுதான். அதனால் தான் உயர் நீதிமன்றத்தை நாட வேண்டும் என சென்னை கிளம்பினோம்.
அவர்கள் எண்ணம் நிச்சயமாக நடைபெறாது. தவெக கட்சியை முடக்க நினைத்தார்கள். மக்கள் விஜய் மீது 100% நம்பிக்கை வைத்துள்ளனர்.
கரூர் சம்பவம் எப்படி நடந்தது என்பது மக்களுக்கு தெரியும்.41 பேர் உயிரிழந்தது தான் மிகப்பெரிய துக்கம், மீள முடியாத துக்கம். 41 பேரின் மரணம் தான் எங்களை கடுமையாக பாதிக்கிறது. எவ்வளவு பெரிய நெருக்கடி வந்தாலும் எதிர்கொள்வோம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b