“கலைஞரின் கனவு இல்லம்” திட்டத்தின் ஒரு இலட்சமாவது பயனாளிக்கு வீட்டிற்கான சாவியினை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்
தென்காசி, 29 அக்டோபர் (ஹி.ச.) கடந்த 2010 ஆம் ஆண்டு குடிசையில்லா மாநிலம் என்ற இலக்கை எய்திடும் வகையில் ‘கலைஞர் வீடு வழங்கும் திட்டம்’ அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழ்நாட்டில் கிராமப்புற பகுதிகளில் ஏறத்தாழ 8 இலட்சம் குடிசை வீடுகள் உள்ளதாக கண்டறிய
“கலைஞரின் கனவு இல்லம்” திட்டத்தின் ஒரு இலட்சமாவது பயனாளிக்கு வீட்டிற்கான சாவியினை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்


தென்காசி, 29 அக்டோபர் (ஹி.ச.)

கடந்த 2010 ஆம் ஆண்டு குடிசையில்லா மாநிலம் என்ற இலக்கை எய்திடும் வகையில் ‘கலைஞர் வீடு வழங்கும் திட்டம்’ அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழ்நாட்டில் கிராமப்புற பகுதிகளில் ஏறத்தாழ 8 இலட்சம் குடிசை வீடுகள் உள்ளதாக கண்டறியப்பட்டதன் அடிப்படையில் 'குடிசையில்லா தமிழ்நாடு என்ற இலக்கினை அடையும் பொருட்டு, எதிர்வரும் 2030-ஆம் ஆண்டிற்குள் ஊரகப் பகுதிகளில் 6 வருடங்களில் 8 இலட்சம் வீடுகள் புதியதாக கட்டித்தர தமிழ்நாடு அரசால் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

தமிழ்நாடு அரசு இதற்காக முனைப்புடன் செயல்பட்டதால் இத்திட்டம் பொது மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. அதனால் 2024-25 ஆம் ஆண்டில் அனுமதிக்கப்பட்ட ஒரு இலட்சம் வீடுகளும் ரூ.3500 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், வீடுகள் கட்டும் பணி தொடங்கப்பட்ட ஓராண்டிற்குள்ளேயே ஒரு இலட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதன் பொருட்டு இன்று (அக் 29) தென்காசியில் நடைபெற்ற அரசின் விழாவில், முதல்வர் ஸ்டாலின் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் ஒரு இலட்சமாவது பயனாளியான தென்காசி மாவட்டம், செங்கோட்டை ஊராட்சி ஒன்றியம், இலத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மு.சுமதியிடம் வீட்டிற்கான சாவியினை வழங்கினார்.

இதேபோன்று, 2025-26-ஆம் ஆண்டில், மேலும் ஒரு இலட்சம் வீடுகள் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டு, இதுநாள் வரை 16,245 வீடுகள் உடனடியாக முடிவுறும் நிலையிலும், 83,755 வீடுகள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்திலும் இருந்து வருகின்றன.

இவை அனைத்தும் 2025-26 ஆம் நிதியாண்டு இறுதிக்குள் கட்டி முடிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Hindusthan Samachar / vidya.b