Enter your Email Address to subscribe to our newsletters

தென்காசி, 29 அக்டோபர் (ஹி.ச.)
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் 2 நாள் பயணமாகத் தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் ஸ்டாலின் இன்று (29.10.2025) காலை தென்காசி மாவட்டத்திற்கு வருகை தந்தார். ஆலங்குளத்தில் அவருக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஆலங்குளத்தை அடுத்த சீயூத்துபகுதியில் உள்ள கழுநீர்குளம் என்ற பகுதியைச் சேர்ந்த மாணவி பிரேமா நான் முதல்வன் திட்டத்தில் பயன்பெற்று, அதன் மூலமாகச் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
அவர் தமிழக அரசின் சார்பில் நடைபெற்ற, ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது தனது பெற்றோர் ஒழுகும் குடிசை வீட்டில் வாழ்ந்து வருவதாகவும், இதனால் அவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவதாகவும் தெரிவித்திருந்தார். இதனையடுத்து தென்காசி மாவட்டத்தின் ஆட்சியர் கமல் கிஷோர் அவர்களுக்கான வீட்டுமனை பட்டாவை வழங்கினார்.
இதனையடுத்து அங்கு வீடு கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று அந்த பணியை ஆய்வு செய்து, அவரது பெற்றோர் உடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
அதோடு அந்த பகுதியைச் சார்ந்த பொதுமக்களும் முதல்வர் மு.க. ஸ்டாலின் உடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அதன் பின்னர் அரசு விழா நடைபெற உள்ள இளத்தூர் பகுதிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்று கொண்டிருந்தார்.
அப்போது சாலையின் ஓரமாக இருந்த மாணவிகள் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு வரவேற்பு அளிக்கும் விதமாகச் சிலம்பம் சுற்றினர். இதனைக் கண்ட முதல்வர் மு.க. ஸ்டாலின் வாகனத்தில் இருந்து இறங்கி மாணவிகள் சிலம்பம் சுற்றியதை ரசித்தார்.
அதன் பின்னர், மாணவி ஒருவரிடம் இருந்த சிலம்பத்தை வாங்கி அவரும் சிலம்பம் சுற்றிக் காண்பித்தார். இதனால் அங்கிருந்தவர்கள் கைத் தட்டி முதல்வர் மு.க. ஸ்டாலினை உற்சாகப்படுத்தினர்.
Hindusthan Samachar / vidya.b