Enter your Email Address to subscribe to our newsletters

அமராவதி, 29 அக்டோபர் (ஹி.ச.)
வங்கக்கடலில் உருவான ‘மோந்தா' புயல், ஆந்திராவை நோக்கி நேற்று முன்தினத்தில் இருந்து பயணித்து, நேற்று இரவு கரையை கடக்கத் தொடங்கியது.
மணிக்கு 17 கி.மீ வேகத்தில் காக்கிநாடா, மசூலிப்பட்டினம் அருகே ‘மோந்தா’ புயல் கரையை கடக்க தொடங்கியது. புயல் கரையை கடக்க தொடங்கியதில் இருந்து ஆந்திராவின் கடலோர மாவட்டங்களில் 110 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசியது. மேலும் அங்கு விடிய, விடிய இடி, மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கியது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆந்திராவின் காக்கிநாடா, கிருஷ்ணா, எலுரு, கிழக்கு மற்றும் மேற்கு கோதாவரி, அம்பேத்கர் கோனசீமா, அல்லூரி சீதாராம ராஜூ உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கடலோர பகுதிகளில் தங்கியிருந்த 2 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான பகுதிகளில் தங்கவைக்கப்பட்டனர்.
மேலும் அந்த 7 மாவட்டங்களுக்கும் இன்று (புதன்கிழமை) காலை 6 மணிவரை அனைத்து வாகன போக்குவரத்துக்கும் தடைவிதிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து கடலோர மாவட்டங்களில் பேரிடர் மீட்புத்துறையினர், போலீசார் உள்பட சுமார் 10 ஆயிரம் பேர் களம் இறக்கப்பட்டனர். அவர்கள் கடலோர பகுதியில் புயல் கரையை கடக்கும் பகுதியில் தீவிர ரோந்து மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
அமராவதியில் உள்ள கண்காணிப்பு மையத்தில் இருந்தவாறு புயல் பாதிப்புகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு முடுக்கிவிட்டார்.
இந்த நிலையில் நள்ளிரவு சுமார் 1 மணியளவில் காக்கிநாடாவின் தெற்கே மசூலிப்பட்டினம் மற்றும் கலிங்கப்பட்டினம் இடையே ‘மோந்தா’ புயல் கரையை கடந்தது.
புயல் காரணமாக மசூலிப்பட்டினம், கிருஷ்ணா ஆகிய கடலோர பகுதிகளில் மின் கம்பங்கள், ராட்சத மரங்கள் ஆகியவை வேரோடு சாய்ந்தன. மேலும் இடி, மின்னலுடன் விடிய, விடிய கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கியது.
புயல் காரணமாக ஆந்திராவில் இருந்து சென்னைக்கு வர இருந்த 6 விமானங்களும், சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு செல்ல இருந்த 3 விமானங்களும் ரத்து செய்யப்பட்டன.
ஆந்திராவில் கனமழை பெய்து வருவதால் 75 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன.
புயல் காரணமாக ஆந்திராவில் 3,778 கிராமங்கள் பாதிக்கப்பட்டதாக சந்திரபாபு நாயுடு தெரிவித்தார். மேலும் மோந்தா புயல் காரணமாக 1.76 லட்சம் ஹெக்டர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு அழிந்ததாக அவர் தெரிவித்தார். இந்த புயல் காரணமாக கபுலுபடாவில் 12.5 செ.மீ., விசாகப்பட்டினத்தில் 12 செ.மி மற்றும் ஆனந்தபுரத்தில் 11.7 செ.மீ அளவில் மழை பதிவானது.
‘மோந்தா’ புயல் காரணமாக ஒடிசாவிலும் கனமழை வெளுத்து வாங்கியது. அங்குள்ள மல்கன்கிரி, கோரபூட், ராயகடா, கஜபதி, கஞ்சம், நபரனங்கபூர் உள்பட 8 மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது.
இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு பேரிடர் மீட்புத்துறையினர், தீயணைப்பு வீரர்கள் என 5 ஆயிரம் பேர் களம் இறக்கப்பட்டு கண்காணிப்பு பணி மேற்கொண்டனர்.
Hindusthan Samachar / JANAKI RAM