Enter your Email Address to subscribe to our newsletters

கிருஷ்ணகிரி, 29 அக்டோபர் (ஹி.ச.)
கிருஷ்ணகிரி மாவட்டம் மகாராஜா கடை வனப்பகுதியில் கடந்த 3 ஆண்டுகளாக முகாமிட்டு உள்ளன சுமார் 10க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் அவ்வப்போது மகாராஜா கடை வனப்பகுதியில் ஒட்டியுள்ள 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் புகுந்து விவசாய நிலங்களைச் சேதப்படுத்தி வருகின்றன.
இந்நிலையில் நேற்று (28.10.2025) இரவு மகாராஜா கடையை அடுத்துள்ள நாராயணப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயில் வேணுகோபால் என்பவர் அவரது கிராமத்திற்கு அருகில் உள்ள தோட்டத்திற்குக் காவலுக்குச் சென்றுள்ளார்.
அப்போது அங்கு வந்த ஒற்றை காட்டு யானை ஒன்று அவரை கடுமையாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் வேணுகோபால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் வேணுகோபால் வீட்டிற்கு வராததால் இன்று (29.10.2025) காலை தோட்டத்திற்குச் சென்று அவரது குடும்பத்தினர் வேணுகோபால் உடலைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து மகாராஜா கடை காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் தகவல் அளிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரது பிரேதத்தைக் கைப்பற்றினர்.
அப்போது அங்கிருந்த பொதுமக்கள், காட்டு யானைகளால் அடிக்கடி உயிர் சேதம் ஏற்படுகிறது எனக் குற்றம்சாட்டி சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கூடியதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.
இதனால் சம்பவ இடத்திற்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் தலைமையில் சுமார் 50க்கும் மேற்பட்ட போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பிறகு உடலை கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
அதோடு, காட்டு இந்த யானைகள் இப்பகுதியில் அடிக்கடி முகாமிட்டு விவசாய நிலங்களை சேதப்படுத்திவருகிறது. இதனால் மனித் உயிரிழப்புகள் ஏற்படுவதால் வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் யானைகளை அடர்ந்த வனப்பகுதிகளுக்கு விரட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தனர்.
இதற்கு அதிகாரிகள் ஒப்புதல் தெரிவித்தனர். அதன் பிறகே அங்கிருந்த பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
Hindusthan Samachar / vidya.b