Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 29 அக்டோபர் (ஹி.ச.)
இந்திய கடல்சார் வார விழா – 2025 மும்பையில் மிக விமர்சையாக தொடங்கியது.
இந்த விழாவில், இந்தியாவின் கடல்சார் துறையின் வலிமையும் வளர்ச்சிப் பாதையும் உலகளவில் வலியுறுத்தப்பட்டன.
தமிழ்நாட்டின் சார்பாக நடைபெற்ற மாநில அமர்வில், அதிகாரிகள் மற்றும் தொழில்துறை பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு, 1,069 கிலோ மீட்டர் நீளமான கடற்கரை கொண்ட இந்தியாவின் இரண்டாவது நீளமான கடற்கரை மாநிலமாக விளங்குகிறது.
மாநிலத்தில் 3 முக்கிய பெருந்துறைமுகங்கள் (சென்னை, தூத்துக்குடி, எண்ணூர்) மற்றும் 17 சிறுதுறைமுகங்கள், பல தொழிற்பூங்காக்கள் ஆகியவை செயல்பட்டு வருகின்றன.
அங்கு சரக்கு ஏற்றுமதி, மீன்பிடி, கப்பல் கட்டுதல், மறுசுழற்சி, கடல்சார் சுற்றுலா போன்ற துறைகளில் தமிழ்நாட்டை முக்கிய மையமாக மாற்றியுள்ளன.
பண்டைய சோழர் காலத்திலிருந்தே தமிழ்நாடு கடல் வணிகத்தில் முன்னோடியாக இருந்து வந்துள்ளது.
சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற நீல பொருளாதார மாநாடு – 2025ல், தமிழ்நாடு தனது கடல்சார் திறன்களை உலகளாவிய முதலீட்டாளர்களிடம் வெளிப்படுத்தியது.
இந்த முயற்சி, இந்திய கடல்சார் வார விழாவின் தொடர்ச்சியான அங்கமாக மாறியுள்ளது.
தமிழ்நாடு “ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம்” என்ற இலக்கை நோக்கி முன்னேறி வரும் நிலையில், கடல்சார் துறையின் மூலம் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது.
முக்கிய முன்னேற்றங்கள்:
1. கடலூர் துறைமுகம் — தனியார் முதலீட்டுடன் 40 ஆண்டுகளுக்கு பிறகு இயக்க நடவடிக்கை.
2. இராமேஸ்வரம் தீவுப் பகுதி — கடல் மார்க்க படகுப் போக்குவரத்து தொடங்குதல்.
3. இராமேஸ்வரம் (இந்தியா) - தலைமன்னார் (இலங்கை) இடையே குறைந்த தூர பன்னாட்டு கப்பல் போக்குவரத்து திட்டம்.
4. கன்னியாகுமரி — விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலையை இணைக்கும் கண்ணாடி இழைப் பாலம் அமைக்கப்பட்டது.
5. உடன்குடி — தமிழ்நாடு மின்வாரியத்திற்குத் தேவையான நிலக்கரி கையாள 8 கி.மீ. நீள அணுகு தோணித்துறை அமைப்பு.
6. கடலூர் — கடல்சார் அருங்காட்சியகம் அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன.
7. தரங்கம்பாடி – நாகப்பட்டினம் – வேளாங்கண்ணி இடையே பயணிகள் படகு போக்குவரத்து தொடங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தமிழ்நாடு முதலமைச்சர் பன்னாட்டு முதலீட்டாளர்களை தமிழ்நாட்டுக்கு வரவேற்கும் நோக்கில் பல்வேறு நாடுகளுக்குச் சென்று, தமிழ்நாட்டின் தொழில்துறை வாய்ப்புகளை வெளிப்படுத்தி வருகிறார்.
ப்இந்த முயற்சிகளால், தமிழ்நாடு இந்தியாவில் முதலீட்டுக்கு மிகுந்த உகந்த மாநிலமாக திகழ்கிறது.
கடல்சார் முன்னேற்றத்தில் தமிழ்நாட்டின் பங்கினை வலியுறுத்தல்
தமிழ்நாடு கடல்சார் துறையில் தொழில்நுட்பம், மனிதவளம், உள்கட்டமைப்பு ஆகியவற்றில் சிறந்த முன்னேற்றம் பெற்று வருகிறது.
இந்தியாவை உலகின் கடல்சார் மையமாக மாற்றும் பயணத்தில், தமிழ்நாடு உறுதுணையாக இருந்து, முன்னுதாரணமாக செயல்படும் உறுதியை தெரிவித்துள்ளது.
“தமிழ்நாட்டின் கடல்சார் வளர்ச்சி இந்தியாவின் கடல்சார் பொருளாதாரத்தை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும்”
என்று மாநில அமர்வின் நிறைவில் தெரிவிக்கப்பட்டது..
இந்த விழாவிம்
சுனில் பாலிவால், IAS., சேர்மன், சென்னை & காமராஜர் போர்ட், மணிவாசன், IAS.,
வெங்கடேஷ், IAS., துணைத் தலைமைச் செயல் அதிகாரி, தமிழ்நாடு கடல்சார் வாரியம்
டாக்டர் தாரேஸ் அஹமது, IAS., M.D. & CEO, கைடன்ஸ் தமிழ்நாடு, விஸ்வநாதன், IAS., டெபுட்டி சேர்மன், சென்னை போர்ட் மற்றும் பலர் கலந்துக்கொண்டனர்.
Hindusthan Samachar / P YUVARAJ