Enter your Email Address to subscribe to our newsletters

டோக்கியோ, 29 அக்டோபர் (ஹி.ச.)
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் 5 நாட்கள் அரசுமுறை பயணமாக கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஆசிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார்.
முதற்கட்டமாக மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் நடந்த ஆசியான் மாநாட்டில் கலந்து கொண்டு தலைவர்களிடைய உரையாற்றினார். அப்போது கம்போடியா-தாய்லாந்து இடையேயான அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
அதனை தொடர்ந்து ஜப்பான் நாட்டிற்கு சென்றடைந்தார். அங்கு மன்னர் நருஹிட்டோவை இம்பீரியல் அரண்மனையில் சந்தித்து டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனை தொடர்ந்து டோக்கியோவில் உள்ள அகசாகா அரண்மனையில் அவர் தங்க வைக்கப்பட்டார்.
இந்த நிலையில் நேற்று அந்த நாட்டின் முதல் பெண் பிரதமரான சனே தகைச்சியை டிரம்ப் சந்தித்தார். பிரதமராக பதவியேற்ற ஒரு வாரத்தில் நாட்டின் முதல் பெண் பிரதமர் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி இடையேயான இந்த சந்திப்பு நாட்டின் வரலாற்று சிறப்பு மிக்க, பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த தருணமாக அந்த நாட்டு மக்கள் மற்றும் ஊடகங்களால் பார்க்கப்பட்டது.
இந்த சந்திப்பின்போது இருவரும் சில நிமிடங்களுக்கு கை குலுக்கி கொண்டனர். அவர்கள் இருவரும் பரஸ்பரம் மகிழ்ச்சியை பரிமாறி கொண்டனர். அப்போது டிரம்ப் சனே தகைச்சியிடம் “இது மிகவும் வலுவான கைகுலுக்கல்” என பாராட்டினார்.
பின்னர் இரு நாட்டு தலைவர்களும் சுமார் 1 மணி நேரம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது அமெரிக்கா மீதான ஜப்பானின் ரூ.46.2 லட்சம் கோடி (550 பில்லியன் டாலர்கள்) முதலீட்டை உறுதி செய்வதற்கான பேச்சு வார்த்தை நடந்தது. மேலும் இருநாட்டு உறவுகள், ராணுவ ஒப்பந்தங்கள் தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டது.
மேலும் அரியவகை கனிமங்கள் தொடர்பான ஒப்பந்தத்தில் இரு நாட்டு தலைவர்களும் கையெழுத்திட்டனர். அரியவகை கனிமங்கள் ஏற்றுமதியில் சீனாவின் ஏகபோகத்தை முறியடிக்கும் விதமாக இந்த ஒப்பந்தம் உருவாக்கப்பட்டு இரு நாடுகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பின்னர் இருநாட்டு தலைவர்களும் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது சனே தகைச்சி,
“புதிய பொற்காலத்தை உருவாக்கும் வகையில் டிரம்புடன் இணைந்து, ஜப்பான்-அமெரிக்க கூட்டணியை உருவாக்குவேன். உலகின் மிகச்சிறந்த வலிமையான கூட்டணியாக இது உருவாகியுள்ளது.”
என்றார்.
“ஜப்பானுக்கு ஒன்று என்றால் முதல் ஆளாக வந்து நிற்பேன்’ என டிரம்ப் பேசினார்.
பின்னர் இருநாட்டு தலைவர்களும் ஜப்பானில் உள்ள யோகோசுகா கடற்படை தளத்திற்கு சென்று இருநாட்டு ராணுவ வீரர்களிடையே உரையாடினர்.
இதனை தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தென்கொரியாவுக்கு சென்றார். அங்கு நடைபெறவுள்ள ஆசியா-பசிபிக் பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்கிறார். பின்னர் சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
Hindusthan Samachar / JANAKI RAM