பொது இடங்களில் 10 பேருக்கு மேல் கூடினால் போலீஸ் அனுமதி பெற வேண்டும் - காங்.அரசு உத்தரவுக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் இடைக்கால தடை
பெங்களூரு, 29 அக்டோபர் (ஹி.ச.) '' கர்நாடகாவில் அரசு கட்டடங்களில் ஆர்.எஸ்.எஸ்., உட்பட தனியார் அமைப்புகளின் நிகழ்ச்சிகள் நடத்த தடை விதிக்க வேண்டும்'' என, தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பிரியங்க் கார்கே, முதல்வர் சித்தராமையாவுக்கு கடிதம் எழுதினார்
'பொது இடங்களில் 10 பேருக்கு மேல் கூடினால் போலீஸ் அனுமதி பெற வேண்டும்' - காங்., அரசு உத்தரவுக்கு இடைக்கால தடை


பெங்களூரு, 29 அக்டோபர் (ஹி.ச.)

' கர்நாடகாவில் அரசு கட்டடங்களில் ஆர்.எஸ்.எஸ்., உட்பட தனியார் அமைப்புகளின் நிகழ்ச்சிகள் நடத்த தடை விதிக்க வேண்டும்' என, தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பிரியங்க் கார்கே, முதல்வர் சித்தராமையாவுக்கு கடிதம் எழுதினார்.

இதையடுத்து, கடந்த 18ம் தேதி மாநில உள்துறை செயலர் பிறப்பித்த உத்தரவில்,

'எந்தவொரு தனியார் அமைப்பும், அரசு இடங்கள், சாலை, பூங்கா, விளையாட்டு மைதானம், கட்டடங்களில் ஒன்றுகூட முடிவு செய்தால், உள்ளூர் போலீஸ் அல்லது கலெக்டரிடம் அனுமதி பெற வேண்டும். இல்லையெனில் சட்ட விரோதமாக கூடியதாக வழக்குப் பதிவு செய்யப்படும்.'

என அறிவிக்கப்பட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து, ஹூப்பள்ளியின் புனஷ்சேத்தன் சேவா அறக்கட்டளை, 'வி - கேர்' அறக்கட்டளை உட்பட நான்கு அமைப்புகள், கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தார்வாட் கிளையில் மனு தாக்கல் செய்தன. இம்மனுக்கள், நீ திபதி நாகபிரசன்னா முன்னிலையில் விசாரணைக்கு வந்தன.

மனுதாரர்கள் தரப்பு வக்கீல் அசோக் ஹாரனஹள்ளி வாதிடுகையில்,

“அரசின் உத்தரவு அரசியலமைப்பின் 13, 14, 19வது பிரிவுகளை மீறுவதாகும். எனவே, அரசு உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.”

என்றார்.

இதற்கு நீதிபதி நாகபிரசன்னா பிறப்பித்த உத்தரவில்,

பொது இடங்களில், 10 பேருக்கு மேல் கூடுவதை தடை செய்யும் அரசின் உத்தரவு, பொது மக்களின் உரிமைகளை பறிப்பதற்கு சமம். அரசின் உத்தரவு அரசியலமைப்பு பிரிவு 13 (2)ஐ மீறுவதாகும்.

எனவே, அக்., 18ல் அரசு பிறப்பித்த உத்தரவு மற்றும் அதை தொடர்ந்து வந்த அனைத்து உத்தரவுகளுக்கும் இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. இது தொடர்பாக ஆட்சேபனை தெரிவிக்க, அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும். விசாரணை நவ., 17க்கு ஒத்தி வைக்கப்படுகிறது.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

இது குறித்து, பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி வெளியிட்ட அறிக்கையில்,

'இந்த உத்தரவு, காங்கிரஸ் அரசுக்கு எச்சரிக்கை. அரசியலமைப்பின் அடிப்படை கொள்கைகளை காங்., அரசு மதிக்க வேண்டும்.'

என குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / JANAKI RAM