Enter your Email Address to subscribe to our newsletters

புதுடில்லி, 29 அக்டோபர் (ஹி.ச.)
பீகார் இளைஞர்களின் கனவுகளை நிதிஷ்குமார் அரசு நசுக்கி விட்டது என்று நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டி உள்ளார்
இது குறித்து அவர் தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளாா். அதில் கூறியிருப்பதாவது:-
சில நாட்களுக்கு முன்பு, பீகார் இளைஞர்களுடன் கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு ஆகியவை குறித்து உரையாடலில் ஈடுபட்டேன். மேற்கண்ட அனைத்து துறைகளிலும் பீகார் மோசமான நிலையில் இருப்பதற்கு ஒரே ஒரு குற்றவாளி பொறுப்பு என்றால், அது பா.ஜனதா-ஐக்கிய ஜனதாதளம் அரசுதான். பீகார் இளைஞர்களுக்கும் இது தெரியும். கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக, மோடி-நிதிஷ்குமார் அரசு, பீகார் இளைஞர்களின் கனவுகளை நசுக்கி விட்டது. மாநிலத்தை கைவிட்டுவிட்டது. ஒவ்வொரு துறையிலும் மாநிலத்தை கீழ்நிலைக்கு தள்ளிவிட்டது.
உதாரணமாக, 9 மற்றும் 10-ம் வகுப்புகளில் படிப்பை பாதியில் நிறுத்துவதை எடுத்துக்கொண்டால், மொத்தம் 29 மாநிலங்களில் பீகார் 27-வது இடத்தில் இருக்கிறது. மாணவர் சேர்க்கை, பெண்கள் எழுத்தறிவு, வேலைவாய்ப்பு, தொழில்துறை வளர்ச்சி, சிசு மரண விகிதம், காப்பீட்டு திட்டங்கள், வீடுகளில் கழிப்பறை வசதி, தனிநபர் வருமானம் என அனைத்திலும் பீகார் கீழ்நிலையில் இருக்கிறது.
இது, இரட்டை என்ஜின் அரசு, மாநிலத்தை எப்படி பின்னுக்கு இழுத்துச் சென்றுள்ளது என்பதை காட்டும் கண்ணாடி. நான் சந்தித்த பீகார் இளைஞர்கள் அறிவுக்கூர்மையானவர்கள். அவர்கள் எங்கு வேண்டுமானாலும் பிரகாசிக்க முடியும். ஆனால், மாநில அரசு, அவர்களுக்கு வாய்ப்பு அளிப்பதற்கு பதிலாக, வேலையில்லா திண்டாட்டத்திலும், கவலையிலும் ஆழ்த்தி விட்டது. தற்போது, மாற்றத்துக்கான நேரம் வந்து விட்டது. நீதி கிடைக்க மகா கூட்டணிக்கு ஆதரவு அளியுங்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / JANAKI RAM