Enter your Email Address to subscribe to our newsletters


கோவை, 29 அக்டோபர் (ஹி.ச.)
துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணன் வருகைக்காக அமைக்கப்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு வளையத்தை மீறி இரண்டு பேர் இருசக்கர வாகனத்தில் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அதை கண்காணித்து பாரதிய ஜனதா கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் அதன் சி.சி.டி.வி கேமரா காட்சிகள் வெளியாகி வைரலானது, அதில் ஒருவர் மது போதையில் தான் பாதுகாப்பு வளையத்திற்கு புகுந்ததாக காவல் துறையினரிடம் கூறும் வீடியோ தற்பொழுது வெளியாகி உள்ளது.
நாட்டின் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் நேற்று கோவை வந்தார்.
பின்னர் அவர் கொடிசியாவில் தொழில் துறையினர் நடத்திய பாராட்டு விழாவில் கலந்து கொண்டு விட்டு ரெட் பீல் பகுதியில் உள்ள சுற்றுலா மாளிகையில் தங்கி ஓய்வெடுத்தார்.
இதை அடுத்து அவர் மாலை 4 மணிக்கு கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதற்காக கோவை மாநகராட்சி அலுவலகம், டவுன்ஹால் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அந்த வழியாக வாகனங்கள் செல்ல காவல் துறையினர் அனுமதிக்கவில்லை, இதற்காக அந்த பகுதியில் இரும்பு தடுப்புகள் மற்றும் கயிறு கட்டி இருந்தனர். இந்நிலையில் பிற்பகல் 2.20 மணிக்கு மாநகராட்சி பிரதான அலுவலகம் அருகே 5 முக்கு சந்திப்பு பகுதியில் இருந்து ஒரு வழிப் பாதையான மணிக்கூண்டு நோக்கி இரண்டு பேர் இருசக்கர வாகனத்தில் வந்தனர்.
அதைப் பார்த்த காவல் துறையினர் அவர்களை தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் அவர்கள் காவல் துறையினரிடம் சிக்காமல் வேகமாக தப்பிச் சென்றனர்.
துணை ஜனாதிபதி வருகைக்காக தடுப்புகள் அமைத்து காவல் துறையினர் பணியில் இருந்த போது பாதுகாப்பு வளையத்தை மீறி இரண்டு பேர் இருசக்கர வாகனத்தில் உள்ளே புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதை அறிந்த பாரதிய ஜனதா நிர்வாகிகள் அங்கு திரண்டனர்.
அவர்கள் காவல் துறையினர் சரியான முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடவில்லை, எனக் கூறி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் காவல் துறையினர் பேச்சு வார்த்தை நடத்தினர். அதை ஏற்று அவர்கள் கலந்து சென்றனர்.
இதை அடுத்து காவல் துறையினர் பாதுகாப்பு வளையத்தை மீறி இருசக்கர வாகனத்தில் உள்ளே புகுந்து தப்பிச் சென்ற இரண்டு பேர் யார் ? என்பது குறித்து உக்கடம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மேலும் கண்காணிப்பு கேமரா காட்சிகளும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதில் அவர்கள் கோவை ஆசாத் நகரைச் சேர்ந்த யாசிப், அனீஸ் ரகுமான் என்பதும் மது போதையில் அந்த வழியாக சென்றதும் தெரிய வந்தது.
அத்துடன் இருசக்கர வாகனத்தை ஒட்டிய ஆசிக் காவல் துறையினர் தன்னை பிடித்து விடுவார்களோ ? என்ற பயத்தில் அங்கு நின்று இருந்த சில வாகனங்கள் மீது மோதி விட்டு தப்பி சென்றதும் தெரியவந்தது. அத்துடன் போலீசாரின் எச்சரிக்கையை மீறி அதிவேகமாக அலட்சியமாகவும் பொது மக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையிலும் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.
இதை அடுத்து காவல் துறையினர் ஆசிக்கை கைது செய்தனர்.
பின்னர் காவல் துறையினர் நடத்திய விசாரணையின் போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி உள்ளது.
அதில் நாஸ் தியேட்டர் அருகே உள்ள ஒயின் ஷாப்பில் தண்ணி அடித்ததாகவும், காவலர் நான்கு பேர் நின்றதை பார்த்து அவர்களிடம் இந்த பாதையில் செல்லலாமா என்று கேட்டதாகவும் ? அதற்கு அவர்கள் மாற்று பாதையில் செல்லக் கூடியதாகவும், மேலும் அங்கு சென்று பார்த்த போது மேலும் காவலர்கள் இருந்ததை கண்டு செய்வதறியாது , பயத்தில் என்ன செய்வது என்று தெரியாமல், அபராதம் விதித்து விடுவார்களா என்ற பயத்தில் வேகமாக சென்று கீழே விழுந்ததாகவும், நானும், தெரிந்த நபரும் மருந்து வாங்க சென்றதாக கூறுகிறார்.
பயத்தில் வந்ததாக காவல் துறை விசாரணை போது கூறும் செல்போன் வீடியோ தற்பொழுது வெளியாகி உள்ளது.
Hindusthan Samachar / V.srini Vasan