Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 29 அக்டோபர் (ஹி.ச.)
கரூரில் நடந்த தமிழக வெற்றிக் கழகப் பிரச்சாரத்தின் போது பெண்கள், குழந்தைகள் உள்பட 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கிப் பரிதாபமாக உயிரிழந்தனர். தமிழ்நாட்டையே உலுக்கிய இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு த.வெ.க. சார்பில் தலா 20 லட்சம் ரூபாய் நிவாரணமாகக் கொடுக்கப்பட்டது.
கரூர் சம்பவத்தில் உயிர் இழந்த நபர்களின் குடும்பத்தினரை, தவெக தலைவர் விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் கூறும் நிகழ்ச்சி மாமல்லபுரத்தில் உள்ள ஓட்டலில் கடந்த அக் 27 ஆம் தேதி நடைபெற்றது.
இந்த நிலையில், சென்னை பனையூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகக் குழுக் கூட்டம் இன்று (அக் 29) நடைபெறுகிறது.
இதுதொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது,
தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகக் குழுக் கூட்டம், இன்று (புதன்கிழமை) காலை 10 மணிக்கு, பனையூர் தலைமை நிலையச் செயலகத்தில் நடைபெற உள்ளது. கழகத் தலைவர் விஜய்யின் ஒப்புதலோடு நடைபெறும் இந்தக் கூட்டத்தில், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b