Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 29 அக்டோபர் (ஹி.ச.)
நாளை நடைபெறவுள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 118-வது ஜெயந்தி தினத்தை முன்னிட்டு, மதுரை மாநகர், கோரிப்பாளையம் சந்திப்பில் உள்ள தேவர் சிலைக்கு பொது மக்களும், அரசியல் கட்சி தலைவர்களும் முக்கிய பிரமுகர்களும் மரியாதை செலுத்த உள்ளனர்.
இதனை முன்னிட்டு, இன்று (அக் 29) மற்றும் நாளை (அக் 30 ) கோரிப்பாளையம் சந்திப்பு வழியாக செல்லும் அனைத்து வாகன போக்குவரத்தும் முற்றிலும் தடை செய்யப்பட்டு, பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் சிரமமின்றி செல்வதற்காக தற்காலிக போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளதாக மதுரை மாநகர காவல் துறை தெரிவித்துள்ளது.
தேவர் ஜெயந்தி விழாவுக்கு வரும் வாகனங்களை தவிர மற்ற வாகனங்களுக்கு எம்.எம். லாட்ஜ் சந்திப்பு, தமுக்கம் சந்திப்பு, சிவசண்முகம் பிள்ளை சாலை சந்திப்பு மற்றும் மீனாட்சி கல்லூரி தரைப்பாலம் சந்திப்பு ஆகிய சாலைகளில் இருந்து கோரிப்பாளையம் சந்திப்பிற்கு செல்வதற்கு எந்த ஒரு வாகனத்திற்கும் அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இன்றும் நாளையும் லாரிகள் மற்றும் கனரக சரக்கு வாகனங்கள் காலை 6.00 மணி முதல் இரவு 10.30 மணி வரை நகருக்குள் நுழைய தடை செய்யப்படுகிறது. இவ்வாகனங்கள் அனைத்தும் மதுரை மாநகருக்கு வெளியே உள்ள சுற்றுச் சாலைகளை பயன்படுத்தி, செல்ல வேண்டிய பகுதிக்கு செல்ல வேண்டும்.
தத்தனேரி மெயின் ரோடு, தமுக்கம் மற்றும் வள்ளுவர் சிலை சந்திப்பிலிருந்து வரக்கூடிய ஆம்புலன்ஸ் வாகனங்கள் அனைத்தும் வழக்கமாக செல்லக்கூடிய சாலையிலேயே செல்லலாம் என்று கூறப்பட்டு உள்ளது. மேலும் மதுரை வழியாக பசும்பொன்னிற்கு செல்லும் வாகனங்கள் அனைத்தும் நகருக்குள் வராமல் சுற்றுச் சாலை வழியாக செல்ல வேண்டும்.
மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இருந்து கோரிப்பாளையம் வழியாக பெரியார் பேருந்து நிலையம் மற்றும் ஆரப்பாளையம் செல்லும் பொதுமக்களின் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அனைத்தும் கே.கே. நகர் ஆர்ச், ஆவின் சந்திப்பு, A1 பார் சந்திப்பில் வலதுபுறம் திரும்பி வைகை வடகரை சாலை சென்று ஓபுளா படித்துறை பாலம் வழியாக வைகை தென்கரைக்கு சென்று வலதுபுறம் திரும்பி யானைக்கல் வழியாக செல்ல வேண்டும்
ஆரப்பாளையம் மற்றும் பாத்திமா கல்லூரியில் இருந்து நத்தம் சாலை, அழகர்கோவில் சாலை, மேலூர் சாலை மற்றும் பனகல் சாலைக்கு செல்லக்கூடிய பொதுமக்களின் இருசக்கர வாகனங்கள் அனைத்தும் செல்லூர் கபடி ரவுண்டானா, எம்.எம்.லாட்ஜ் சந்திப்பு சென்று மேற்கூறிய வழித்தடங்களை பயன்படுத்தி செல்லலாம் அல்லது ரவுண்டானாவில் வலதுபுறம் திரும்பி வைகை வடகரை சாலை வழியாக செல்லலாம் என காவல்துறை கூறியுள்ளது.
மேலும் தற்காலிக போக்குவரத்து மாற்றத்திற்கு பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் ஒத்துழைப்பு வழங்க மதுரை மாநகர காவல்துறை வலியுறுத்தி உள்ளது.
Hindusthan Samachar / vidya.b