Enter your Email Address to subscribe to our newsletters


கோவை, 30 அக்டோபர் (ஹி.ச.)
தமிழகத்தில் 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்தல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) குறித்தான ஆலோசனை கூட்டம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் நடைபெற்று வருகிறது. அதில் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து எடுத்துரைக்கப்பட்டு சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்படுகிறது.
அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் சிறப்பு தீவிர திருத்தம் குறித்தான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான பவன்குமர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக, அதிமுக, தேமுதிக, பாஜக, கம்யூனிஸ்ட், ஆம் ஆத்மி உள்ளிட்ட பல்வேறு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் வாக்காளர் தகுதி, சிறப்பு தீவிர திருத்தத்திற்கான அவசியம், முக்கிய செயல்பாட்டாளர்கள் யார்?, முக்கிய செயல்முறைகள், முக்கிய படிநிலைகள், கண்கெடுப்பு படிவம், கணக்கெடுப்பு படிவத்துடன் சமர்பிக்க வேண்டிய ஆவணங்கள் ஆகியவை குறித்து எடுத்துரைக்கப்பட்டு அரசியல் கட்சியினரின் பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் அதிமுக மற்றும் பாஜக கட்சியினர் இந்த சிறப்பு தீவிர திருத்தத்தை வரவேற்பதாகவும் இது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் கேட்டுக் கொண்டனர். அதே சமயம் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வட மாநில வாக்காளர்கள் பற்றிய தெளிவான விவரங்கள் இல்லை என்றும் இதுகுறித்து முன்கூட்டியே அரசியல் கட்சிகளிடம் கலந்துரையாடியிருக்க வேண்டும் இந்திய தேர்தல் ஆணையம் அவர்களாகவே முடிவெடுத்த பின்பு இதனை அனைத்து அரசியல் கட்சியினருக்கு வலியுறுத்துவது என்பது ஏற்புடையது அல்ல என்று கூறி ஆட்சேபனை தெரிவித்தனர்.
மேலும் ஈஷா பகுதியில் உள்ள வாக்காளர்கள் பற்றி கவனம் செலுத்த வேண்டும் என்று திமுகவினர் வலியுறுத்தினர்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர்கள், தேர்தல் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Hindusthan Samachar / V.srini Vasan