Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 30 அக்டோபர் (ஹி.ச.)
இந்தியா - ஐரோப்பிய யூனியன் இடையேயான தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் இந்தாண்டு இறுதிக்குள் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது;
பெர்லின் உலக மாநாட்டில் கலந்து கொண்டேன். அங்கு சர்வதேச அளவில் நிலவும் சூழல் குறித்து உலக நாடுகளின் தலைவர்களிடையே விவாதம் நடைபெற்றது. ஐரோப்பாவைச் சேர்ந்த பல வணிக நிறுவனங்களுடன் நானும் ஆலோசனை நடத்தினேன்.
அப்போது, பல நாடுகள் இந்தியாவுடன் வர்த்தக உறவு வைத்துக் கொள்ள ஆர்வம் காட்டின.
3 நாள் நடந்த ஆலோசனையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 20 சாப்டர்களில் 10க்கு இருதரப்பும் ஒப்புக் கொண்டு விட்டன. அடுத்த வாரம் மீண்டும் பேச்சு வார்த்தை நடைபெற இருக்கிறது. நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் ஐரோப்பிய வர்த்தக ஆணையர் இந்தியா வர இருக்கிறார். அப்போது, பேச்சுவார்த்தையில் தீர்வு ஏற்பட்டு, தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தை நிறைவேற்ற முடிவு செய்துள்ளோம்.
நியாயமான, சமமான தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தை நிறைவேற்ற முனைப்பு காட்டி வருகிறோம். இது இருநாடுகளுக்கு இடையே பரஸ்பர உணர்வு, வலிமை மற்றும் வணிகம், முதலீடுகளை ஊக்குவிக்கும் ஒரு கூட்டாண்மையை உருவாக்குகிறது.
பிரதமர் மோடி தலைமையில் இந்தியா மீண்டும் தன்னை நிருபித்துள்ளது. ஏழை, வளரும் பொருளாதார நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாக இந்தியா உள்ளது. உலக நன்மை, சமாதானம் மற்றும் செழிப்புக்கான கூட்டு நடவடிக்கைக்காக நிற்கிறோம். இன்று இந்தியாவின் மதிப்பு உயர்ந்து வருகிறது. நம் மக்களிடையே அதிகரித்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / JANAKI RAM