Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 30 அக்டோபர் (ஹி.ச.)
ஆரம்ப சுகாதார நிலையத்தில் 3 மணி நேரமாக மருத்துவர்கள் யாரும் இல்லாததால் கடலூர் மாவட்டம் மங்களூரில் பாம்பு கடித்த விவசாயி ஒருவர் பலியாகிய செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது என பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
அதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
தமிழகத்தில் கிராமங்கள்தோறும் ஒன்று மருத்துவர்கள் இருப்பதில்லை அல்லது தகுந்த மருத்துவ வசதிகள் இருப்பதில்லை. மருத்துவர்கள் நியமனம் குறித்த கேள்வி எழும்போதெல்லாம் ஏதோ ஒரு எண்ணிக்கையைக் கூறி மழுப்புவதில் மட்டுமே குறியாக இருக்கிறார் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் அவர்கள்.
போதிய மருத்துவ வசதிகளின்றி அப்பாவிப் பொதுமக்கள் மடிந்து வரும் வேளையில், உலகமே போற்றும் மருத்துவக் கட்டமைப்பு இது என்று மேடைகளில் போலியாக பெருமிதம் கொள்வதற்கு முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் வெட்கப்பட வேண்டும்.
விளம்பரத் திட்டங்களை அறிவித்து நலம் காக்கும் ஸ்டாலின் என்று பெயர்சூட்டி விளம்பரம் தேடுவதற்கு பதில், ஆட்சி முடியும் தருவாயிலாவது மக்கள் உயிரைப் பாதுகாக்கும் விதமாக அடிப்படை மருத்துவ வசதிகளை மேம்படுத்த வேண்டும் திமுக அரசு.
அது ஒன்று மட்டுமே இதுவரை பல உயிர்களைக் காவு வாங்கி பாவம் புரிந்ததற்குத் தகுந்த பிராயசித்தமாக அமையும் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ