Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 30 அக்டோபர் (ஹி.ச)
தமிழகத்தில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட அரசு பணி இடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு முடிவை கடந்த அக்டோபர் 22 ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது.
இந்நிலையில் தற்போது டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் தகுதி பெற்றோருக்கான கணினி சான்றிதழ் சரிபார்ப்பிற்கான (Onscreen Certificate Verification) தேர்வர்களின் பட்டியலை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
இது குறித்து டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,
கணினிவழித்திரை சான்றிதழ் சரிபார்ப்பிற்கு (Onscreen Certificate Verification) தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்கள் தங்களது சான்றிதழ்களை 29.10.2025 முதல் 07.11.2025 வரை தேர்வாணைய இணையதளத்தின் ஒருமுறைப் பதிவு பிரிவின் (One Time Registration Platform) மூலம் பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
சான்றிதழ்களை உரிய நேரத்திற்குள் பதிவேற்றம் செய்யாத தேர்வர்கள், தேர்வின் அடுத்த நிலைக்கு பரிசீலிக்கப்படமாட்டார்கள்.
கணினிவழித்திரை சான்றிதழ் சரிபார்ப்பிற்கு கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிகளுக்கு பொதுப் பிரிவினர் மற்றும் அனைத்து இடஒதுக்கீடு பிரிவினர் முறையே 1:3/1:2 என்ற விகிதத்திலும், வனக்காப்பாளர், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர், வனக் காவலர், வனக் காவலர் (பழங்குடியின இளைஞர்) பதவிகளுக்கு அனைத்து பிரிவினர்களும் 1:6 என்ற விகிதத்திலும் அனுமதிக்கப்படுவார்கள்.
பணி நியமனம் கணினி வழி சரிபார்ப்புக்கு பிறகு எழுத்துத் தேர்வில் பெறப்பட்ட மதிப்பெண்களின் அடிப்படையில் மற்றும் நியமனங்களுக்கான இடஒதுக்கீடு விதிக்கு உட்பட்டு, தேர்வர்கள் மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு (பொருந்தக்கூடிய இடங்களில்) அனுமதிக்கப்படுவார்கள்.
கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், சுருக்கெழுத்து தட்டச்சர், நிலை III பதவிகளுக்கு பொதுப் பிரிவிற்கு 1:3 என்ற விகிதத்திலும், அனைத்து இடஒதுக்கீடு பிரிவுகளுக்கும் 1:1.5 என்ற விகிதத்திலும் தேர்வர்கள் அனுமதிக்கப்படுவார்கள். தட்டச்சர் பதவிக்கு, பொதுப் பிரிவிற்கு 1:3 என்ற விகிதத்திலும், அனைத்து இடஒதுக்கீடு பிரிவுகளுக்கும் 1:2 என்ற விகிதத்திலும் தேர்வர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
வனக்காப்பாளர் மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர், ஆகிய பதவிகளுக்கு, பொதுப் பிரிவிற்கு 1:1.2 என்ற விகிதத்திலும், அனைத்து இடஒதுக்கீடு பிரிவுகளுக்கும் 1:1.1 என்ற விகிதத்திலும் தேர்வர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
கலந்தாய்வு நடைபெறும்போது, பதவிகளின் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை / அலகு (யூனிட்) தொடர்பான விவரங்கள் Video Projector மூலம் காண்பிக்கப்படும். காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை ஒவ்வொரு பத்து நொடிக்கும் புதுப்பிக்கப்படும்.
விண்ணப்பதாரரின் விருப்பத் தேர்வு அடிப்படையில், பதவி / அலகு ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஒதுக்கீட்டு ஆணை தனிப்பட்ட பார் குறியீடு (Bar code) அடையாளத்துடன் அப்பொழுதே வழங்கப்படும். அனைத்து செயல்முறைகளும் CCTVன் மூலம் கண்காணிக்கப்படும்.
சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேவையான ஆவணங்கள்
1). சமீபத்திய புகைப்படம்
2). 10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்
3). 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்
4). பட்டப்படிப்பு மதிப்பெண் சான்றிதழ்
5). சாதிச் சான்றிதழ்
6). தமிழ் வழிச் சான்றிதழ்கள் (தேவைப்படின்)
7). சிறப்பு இடஒதுக்கீட்டு சான்றிதழ்கள் (தேவைப்படின்)
8). தட்டச்சர், சுருக்கெழுத்து, கணினி சான்றிதழ்கள் (தேவைப்படின்)
9). உறுதிமொழிப் படிவம்
இதில் சாதிச் சான்றிதழில் தந்தை பெயர் இருக்க வேண்டும். கணவர் பெயரில் இருக்கும் சாதிச் சான்றிதழ் ஏற்றுக் கொள்ளப்படாது.
ஆவணங்களை பதிவேற்றம் செய்ய தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளப் பக்கத்திற்குச் செல்ல வேண்டும்.
முகப்பு பக்கத்தில் Registered User என்ற இணைப்பை கிளிக் செய்ய வேண்டும். அதில் உங்கள் ஒருமுறை பதிவெண் மற்றும் கடவுச்சொல் ஆகியவற்றைக் கொண்டு உள்நுழைய வேண்டும்.
இப்போது உங்களது சுயவிவரப் பக்கம் காண்பிக்கப்படும். அதில் Upload Documents என்ற இணைப்பை கிளிக் செய்ய வேண்டும்.
அதில் குரூப் 4 தேர்வுக்கான இணைப்பை தேர்வு செய்து, ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். ஆவணங்கள் அனைத்தும் 500kb-க்குள் இருக்க வேண்டும். மேலும் pdf வடிவில் இருக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b