Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 30 அக்டோபர் (ஹி.ச.)
காப்பீட்டு நிறுவனங்களிடம் பேசி விவசாயிகளுக்கு பயிர்க்காப்பீட்டுத் தொகையை விரைந்து வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் எக்ஸ் தளத்தில் இன்று (அக் 30) கூறியிருப்பதாவது,
காவிரி டெல்டாவில் கனமழையால் சேதமடைந்த பயிர் கணக்கெடுப்பு பணியைத் துரிதப்படுத்தப்பட வேண்டும் – பாதிப்புக்குள்ளான அனைத்து விவசாயிகளுக்கும் உரிய இழப்பீடு கிடைப்பதைத் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து பெய்த கனமழையால் அறுவடைக்குத் தயார் நிலையில் இருந்த நெற்பயிர்களும், நெல் கொள்முதல் நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்ட நெல் மூட்டைகளும் மழையில் நனைந்து வீணாகிக் கொண்டிருப்பதால் விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
தொடர் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களைக் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில், 33 சதவிகிதத்திற்கு அதிகமான பாதிப்பு அடைந்த பயிர்களுக்கு மட்டுமே இழப்பீடு வழங்கப்படும் என வேளாண்மைத்துறை அமைச்சரும், அதிகாரிகளும் தெரிவித்திருக்கும் தகவல் விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது.
விதை நெல்லில் தொடங்கி உரம் தெளித்தல், வாடகை இயந்திரங்கள் என ஒரு ஏக்கருக்கு சுமார் 36 ஆயிரம் ரூபாய் செலவாகும் நிலையில், அரசு வழக்கமாக அறிவிக்கும் இழப்பீடு போதுமானதாக இருக்காது என்பதோடு, நடப்பாண்டில் உற்பத்திச் செலவுக்கு ஏற்ப வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையையும் அதிகரிக்க வேண்டும் எனக் காவிரி டெல்டா விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எனவே, 33 சதவிகிதத்திற்கு அதிகமான பாதிப்பு இருந்தால் மட்டுமே இழப்பீடு வழங்கப்படும் என்ற அறிவிப்பை மறுபரிசீலனை செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் உரிய இழப்பீடை வழங்குவதோடு, காப்பீட்டு நிறுவனங்களிடம் பேசி பயிர்க்காப்பீட்டுத் தொகையை விரைந்து வழங்குவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என வேளாண்மைத்
துறையையும் தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b