Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 30 அக்டோபர் (ஹி.ச.)
தமிழகத்தில் கிருஷ்ணகிரி, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் 3 இடங்களில் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான முன் சோதனை பணிகள் நவ.1 முதல் தொடங்கி பல வகைப்பாடுகளில் அம்மாதம் இறுதிவரை நடைபெற உள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
மத்திய அரசு வரும் 2027-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவது குறித்து, கடந்த ஜூன் மாதம் அறிவித்தது. இந்த அறிவிப்பு தமிழக அரசின் அரசிதழில் கடந்த ஜூலை 16-ம் தேதி வெளியிடப்பட்டது. மக்கள் தொகை கணக்கெடுப்புச் சட்டப்படி, கடந்த அக்.16-ம் தேதி மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, 2027-ம் ஆண்டுக்கான இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான முன் சோதனை நடத்த இருக்கிறது.
இது, 2027-ல் நடைபெறவுள்ள மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன் நடத்தப்படும் ஒரு முக்கிய முன்னோட்டம் மற்றும் ஆயத்தப் பணியாகும். இது இந்தியாவின் முதல் முழுமையான டிஜிட்டல் கணக்கெடுப்பாகும். இந்த முன்சோதனையின் முடிவுகள், எதிர்நோக்கவிருக்கும் செயல்பாட்டு சவால்களை அறிந்து அவற்றை நிவர்த்தி செய்ய உதவும்.
முதல்முறையாக, செல்போன் செயலிகளைப் பயன்படுத்தி தரவுகள் சேகரிக்கப்படுவதுடன், மக்கள் தொகை கணக்கெடுப்பு மேலாண்மை மற்றும் கண்காணிப்பு அமைப்பு (CMMS) வலைதளம் மூலம் இந்த செயல்பாடுகள் நிர்வகிக்கப்படும். முதல்கட்டமான வீட்டுப்பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்புக்கான முன் சோதனை வரும் நவ.10 முதல் 30-ம் தேதி வரை நடைபெறுகிறது. அத்துடன் நவ.1 முதல் 7-ம் தேதி வரை சுயகணக்கெடுப்பு (Selfe numeration) செய்வதற்கான முன் சோதனை யும் நடைபெறவுள்ளது. முன் சோதனைக்காக தமிழக அரசுடன் கலந்தாலோசித்து 3 இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
அதன்படி கிராமப்புற வகைபாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி தாலுகா, திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கேபேட்டை தாலுகாவின் ஒரு பகுதியும், நகர்ப்புற வகைபாட்டில் காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு நகராட்சியும் தேர்வாகியுள்ளது. தமிழ்நாடு மக்கள்தொகை கணக்கெடுப்பு இயக்குநரகம், இந்த முன் சோதனை பணி சுமூகமாக நடைபெறுவதற்கு, தொழில்முறை வழிகாட்டுதல், பயிற்சி மற்றும் மேற்பார்வை உள்ளிட்டவற்றை தமிழக அரசுடன் ஒருங்கிணைந்து செயல்படுத்தும்.
மாநில அரசின் கல்வி, வருவாய், சுகாதாரம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் போன்ற பல்வேறு துறைகளிலுள்ள அலுவலர்கள் களப்பணிக்காக கணக்கெடுப்பாளர்களாகவும் மேற்பார்வையாளர்களாகவும் செயல்படுவார்கள். அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட மாதிரிப் பகுதிகளில் உள்ள பொதுமக்கள், முன் சோதனையின்போது மக்கள் தொகை கணக்கெடுப்பு களப்பணியாளர்களுக்கு முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.
இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b