Enter your Email Address to subscribe to our newsletters

தென்காசி, 30 அக்டோபர் (ஹி.ச.)
தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள பல்வேறு நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் வரத்தானது தொடர்ந்து அதிகரித்து காணப்பட்டு வருகிறது.
அந்த வகையில், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் இருந்து வரும் அனுமன் நதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தென்காசி மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய அணையான அடவிநயினார் கோவில் நீர்த்தேக்கமானது தற்போது தனது முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிந்து வருகிறது.
குறிப்பாக, இந்த வருடத்தில் 4-வது முறையாக தற்போது அடவிநயினார் கோவில் நீர் தேக்கமானது நிரம்பி வழிந்து வரும் நிலையில், கார் சாகுபடி முடிந்து தற்போது பிசான சாகுபடி செய்வதற்கான தயார் நிலையில் விவசாயிகள் ஈடுபட்டு வரும் நிலையில், தற்போது அணையானது நிரம்பி வழிந்து வருவதால் பிசான சாகுபடிக்கு தேவையான நீரானது பற்றாக்குறை இல்லாமல் கிடைக்கும் என்பதால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும், தற்போது அணையானது தனது முழு கொள்ளவான 132 அடி எட்டியுள்ள நிலையில் தற்போது அணைக்கு வரும் 61 கன அடி நீரானது அப்படியே வெளியேறி வருகிறது.
இதன் காரணமாக அனுமன் நதி ஆற்றில் சற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், ஆற்றுப்படுகைகள் அருகே யாரும் இறங்க வேண்டாம் எனவும் பொதுப்பணித்துறை சார்பில் அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / ANANDHAN