Enter your Email Address to subscribe to our newsletters

நெல்லை, 30 அக்டோபர் (ஹி.ச.)
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை கக்கன் நகர் பகுதியைச் சேர்ந்த ராஜபாண்டி அவர்களின் மகன் சுப்புராஜ் (36) மற்றும் அவரது குடும்பத்தினரைச் சேர்ந்த தெய்வானை, ராஜபாண்டி, முத்துலட்சுமி ஆகிய நால்வரும் கட்டிட வேலை செய்து வாழ்ந்து வருகின்றனர்.
நான்கு பேரும் ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் 2014 ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை மாதம் ரூ.550 வீதம் மொத்தம் 60 தவணைகள் (ரூ.33,000/-) செலுத்தியுள்ளனர்.
ஒவ்வொருவருக்கும் திருவைகுண்டம் வட்டம் சேர குளம் பகுதியில் 2 ¾ சென்ட் நிலத்தில் 1200 சதுர அடியில் வீடு கட்ட பிளாட் பத்திரப்பதிவு செய்து தருவதாக நிறுவனம் உறுதியளித்தது.
தவணைகள் அனைத்தும் முடிந்த பின்னரும் பத்திரப்பதிவு செய்யாமல், மேலும் ரூ.1,00,000/- கூடுதலாக தர வேண்டும் என நிறுவனம் நிர்பந்தம் செய்துள்ளது.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான நால்வரும் வழக்கறிஞர் பிரம்மா மூலமாக திருநெல்வேலி நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.
நிர்வாக காரணத்தினால் வழக்கு திருநெல்வேலி கூடுதல் நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையத்திற்கு மாற்றப்பட்டது.
வழக்கினை விசாரித்த ஆணைய தலைவர் பிறவிபெருமாள் மற்றும் உறுப்பினர் சண்முகப்பிரியா ஆகியோர்,
வெற்றி ரியல் எஸ்டேட் நிறுவனம் செய்த செயலானது நேர்மையற்ற வாணிபம் என்பதால் நால்வருக்கும் நியாயமான நஷ்டஈடு வழங்க உத்தரவிட்டனர்.
அதன்படி ஒவ்வொரு நபருக்கும் செலுத்திய தவணைத் தொகை ரூ.33,000, அதற்கு 31.01.2019 முதல் 9% வட்டி (ரூ.20,041), நஷ்டஈடு ரூ.25,000, வழக்குச் செலவு ரூ.10,000 என மொத்தம் ரூ.88,401 வழங்க வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டது.
நான்கு நபர்களுக்கும் சேர்த்து மொத்தம் ரூ.3,52,165 வழங்க வெற்றி ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு திருநெல்வேலி கூடுதல் நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் 45 தினங்களுக்குள் உத்தரவை நிறைவேற்ற வேண்டும் என்றும், தவறினால் ஒன்பது சதவீத வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Hindusthan Samachar / ANANDHAN