Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 31 அக்டோபர் (ஹி.ச.)
ரயில் பயணிகளின் வசதிக்காக சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயிலில் நவம்பர் 1-ம் தேதி முதல் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படவுள்ளன.
இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
செங்கோட்டை-தாம்பரம் இடையே வாரத்தில் 3 நாட்கள் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 20681, 20682) இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயிலில் கூடுதலாக ஒரு ஏ.சி. இரண்டடுக்கு பெட்டி, 2 ஏ.சி. மூன்றடுக்கு பெட்டி, 3 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டி மற்றும் ஒரு பொது பெட்டிகள் இணைக்கப்பட உள்ளது.
தாம்பரத்தில் இருந்து நவம்பர் 1ம் தேதி (சனிக்கிழமை) முதல், செங்கோட்டையில் இருந்து நவம்பர் 2ம் தேதி முதல் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். வருகிற ஏப்ரல் மாதம் இறுதி வரையில் இது அமலில் இருக்கும். நவம்பர் 2ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் 2026-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை இந்த பெட்டிகள் தற்காலிகமாக இணைக்கப்பட்டு இருக்கும்.
தாம்பரம்-நாகர்கோவில்:
இதே போல் நெல்லை வழியாக இயக்கப்படும் தாம்பரம்-நாகர்கோவில் (வண்டி எண்: 22657, 22658) ரெயிலில் ஒரு ஏ.சி. இரண்டடுக்கு பெட்டி, 2 மூன்றடுக்கு ஏ.சி. பெட்டிகள் 3 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், ஒரு பொது பெட்டி ஆகியவை இணைக்கப்பட்டிருக்கும்.
தாம்பரத்தில் இருந்து நவம்பர் 2-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல், நாகர்கோவிலில் இருந்து நவம்பர் 3-ம் தேதி முதல் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும். இவை ஏப்ரல் மாதம் இறுதி வரை அமலில் இருக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b