Enter your Email Address to subscribe to our newsletters

திருவண்ணாமலை, 31 அக்டோபர் (ஹி.ச.)
வருகிற 4-ந் தேதி மற்றும் 5-ம் தேதி ஆகிய நாட்களில் பவுர்ணமி வர உள்ளது.
இது குறித்து திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் இணை ஆணையர் பரணிதரன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் அன்னாபிஷேகமும் ஒன்றாகும். அருணாசலேஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி உலக உயிர்களுக்கு உணவளிக்கும் இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அன்னாபிஷேகம் விழா நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டிற்கான அன்னாபிஷேகம் விழா வருகிற 4-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. அன்றைய தினம் பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி கிடையாது. அப்போது நடை சாற்றப்பட்டு மீண்டும் மாலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
மேலும் வருகிற 4-ந் தேதி மற்றும் 5-ந் தேதி ஆகிய நாட்களில் பவுர்ணமி வர உள்ளது. அன்றைய தினங்களில் அதிகளவில் பக்தர்கள் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வருவார்கள் என்பதால் வருகிற 4 மற்றும் 5-ந் தேதிகளில் தரிசனத்திற்கு எவ்வித முன்னுரிமையும் வழங்கப்படமாட்டாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM