விரைவில் முழு கொள்ளளவை எட்டும் சோழவரம் ஏரி - நீர்வளத்துறை கண்காணிப்பு
திருவள்ளூர், 31 அக்டோபர் (ஹி.ச.) திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சோழவரம் ஏரியானது 1.08டி.எம்.சி., கொள்ளளவுடன் சென்னையின் குடிநீர் ஆதாரங்களில் ஒன்றாக விளங்குகின்றது. இந்த ஏரியில் முழு கொள்ளளவிற்கு தண்ணீரை தேக்கிவைக்கும்போது, கரைகள் சேதம் அடைந்
விரைவில் முழு கொள்ளளவை எட்டும் சோழவரம் ஏரி - நீர்வளத்துறை கண்காணிப்பு


திருவள்ளூர், 31 அக்டோபர் (ஹி.ச.)

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சோழவரம் ஏரியானது 1.08டி.எம்.சி., கொள்ளளவுடன் சென்னையின் குடிநீர் ஆதாரங்களில் ஒன்றாக விளங்குகின்றது. இந்த ஏரியில் முழு கொள்ளளவிற்கு தண்ணீரை தேக்கிவைக்கும்போது, கரைகள் சேதம் அடைந்ததை தொடர்ந்து, கடந்த ஒரு ஆண்டாக, 40 கோடி ரூபாயில், அங்கு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

மொத்தம் உள்ள, 3.5 கி.மீ., நீளம் கொண்ட ஏரியின் கரையில், அதிக பாதிப்புள்ள பகுதிகள் கண்டறியப்பட்டு, 1.04 கி.மீ., தொலைவிற்கு சீரமைப்பு பணிகள் நடைபெற்றன.

இப்பணிகளுக்காக, கடந்த ஆண்டு குறைந்த அளவில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டிருந்தது.தற்போது கரை சீரமைப்பு பணிகள் முடிந்த நிலையில், ஏரியில் முழு கொள்ளளவிற்கு தண்ணீர் தேக்கி வைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

தொடர்ந்து பெய்து வரும் மழையால் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து வேகமாக நிரம்பி வருகிறது. கடந்த, 21ம் தேதி, 0.4 டி.எம்.சி., இருந்த நிலையில், தற்போது, 0.8 டி.எம்.சியாக உயர்ந்து உள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில், 0.5 டி.எம்.சி., தண்ணீர் இருந்தது.

தற்போது, விநாடிக்கு, 429கனஅடி நீர்வரத்து இருப்பதால், அடுத்த சில தினங்களில் ஏரி முழு கொள்ளளவை எட்டும் நிலை உள்ளது.

ஏரியின் நீர்மட்டம் அதிகரித்து வருவதை தொடர்ந்து, நீர்வளத்துறை அதிகாரிகள் ஏரியின் கரைகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

Hindusthan Samachar / vidya.b