Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 31 அக்டோபர் (ஹி.ச.)
தமிழக அரசின் 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், தமிழகத்தில் பல்வேறு கலை, அறிவியல், பொறியியல், மருத்துவம், வேளாண்மை உள்ளிட்ட அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் உயர் தொழில்நுட்ப சாதனங்களை வழங்க திட்டமிடப்பட்டு, முதல்கட்டமாக அடுத்த 2 ஆண்டுகளில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு அவரவர் விருப்பத்தின் அடிப்படையில் ஒவ்வொருவருக்கும் கைக்கணினி (டேப்லெட்) அல்லது மடிக்கணினி (லேப்டாப்) வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதற்காக முதல்கட்டமாக நடப்பாண்டில் ரூ.2 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, இந்தத் திட்டத்தை செயல்படுத்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, கல்லூரி மாணவர்களுக்கு வழங்க 20 லட்சம் மடிக்கணினிகளை கொள்முதல் செய்வதற்கான சர்வதேச டெண்டரை தமிழக அரசின் எல்காட் நிறுவனம் கோரியது.
இந்த டெண்டரில் பல்வேறு நிறுவனங்கள் கலந்து கொண்ட நிலையில் மூன்று நிறுவனங்களுக்கு மடிக்கணிகளை சப்ளை செய்வதற்கான பணி ஆணையை தமிழ்நாடு அரசு வழங்கி உள்ளது.
இதன்படி, முதல் கட்டமாக 10 லட்சம் மடிக்கணினிகளை கொள்முதல் செய்ய
எச்பி, டெல், ஏசர் ஆகிய மூன்று நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசுக்கு ஆணை வழங்கியுள்ளது.
முன்னதாக, மடிக்கணினி மாதிரி மற்றும் அதில் இடம்பெறும் தொழில்நுட்ப அம்சங்களை பார்த்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் இறுதி செய்தார்.
குறிப்பாக, மூன்று நிறுவனங்களிடமிருந்து நேரடியாக தமிழ்நாடு அரசு இந்த மடிக்கணினிகளை கொள்முதல் செய்கிறது.
மார்ச் மாத இறுதிக்குள் மடிக்கணினி விநியோகம் செய்யும் பணியினை முழுமையாக முடிக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.
மடிக்கணினிகளை மாணவர்களுக்கு விநியோகம் செய்வது மற்றும் அந்தத் திட்டத்தை தொடங்குவது தொடர்பாக அடுத்த வாரம் துணை முதலமைச்சர் தலைமையிலான குழு கூடி முடிவெடுக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Hindusthan Samachar / P YUVARAJ