Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 31 அக்டோபர் (ஹி.ச.)
கோவை தாஜ் விவாண்டா ஹோட்டலில் இந்தியன் வங்கியின் களப் பொது மேலாளர் அலுவலகம் சார்பில் எம்எஸ்எம்இ (சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்) முகாம் நடைபெற்றது.
பாரம்பரிய முறையில் குத்துவிளக்கு ஏற்றி, முகாம் துவங்கியது. இதில் இந்தியன் வங்கியின் நிர்வாக இயக்குநரும் தலைமை செயல் அதிகாரியுமான பினோத் குமார், கோவை கள பொது மேலாளர் பி.சுதா ராணி, கோவை மண்டல மேலாளர் வெங்கடரமணா ராவ் சி.எச், துணை மண்டல மேலாளர் அமீருல்லா ஜவாஹிர் கே.எம், மற்றும் சிறப்பு விருந்தினராக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆர்எம்ஓ டாக்டர் வாசுதேவன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இம்முகாமில் மொத்தம் ரூ.950 கோடி ரூபாய்க்கும் மேல் எம்எஸ்எம்இ கடன்களுக்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது.
ஒரே கூரையின் கீழ் அனைத்து கடன்களுக்கும் இவ்வளவு பெருந்தொகைக்கு அங்கீகாரம் வழங்கியது ஓர் புதிய சாதனை நிகழ்வாகும்.
முகாமில் வங்கியின் நிர்வாக இயக்குநரும் தலைமை செயல் அதிகாரியுமான பினோத் குமார் பேசியதாவது:
இந்தியன் வங்கி நாடு முழுவதும் தொடர்ந்து இதுபோன்ற எம்எஸ்எம்இ முகாம்களை நடத்தி வருகிறது. தமிழ்நாடு குறிப்பாக கோவை எம்எஸ்எம்இ துறையின் முக்கிய மையமாக இருக்கிறது.
இந்தியன் வங்கியின் எம்எஸ்எம்இ வளர்ச்சி தற்போது 16&17% வரை உயர்ந்துள்ளது. எங்கள் வங்கியின் முழு கடன் தொகுப்பில் எம்எஸ்எம்இ பங்கு 14% ஆக உள்ளது.
இதை 17% வரை உயர்த்துவதே எங்கள் இலக்கு. வாடிக்கையாளர்கள் கிளைக்கு வராமலேயே வீட்டில் இருந்தபடியே கடன் பெறும் வகையில் 14 புதிய டிஜிட்டல் சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முகாமில் கலந்து கொண்ட வாடிக்கையாளர்களும் இந்தியன் வங்கி ஆற்றிவரும் சிறந்த சேவைகளைக் குறிப்பிட்டு பாராட்டுத் தெரிவித்தனர்.
மேலும் முகாமில் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நோயாளிகள் பயன்பாட்டிற்காக 10 வீல் சேர்கள் இந்தியன் வங்கியின் பெரு நிறுவன சமூக பொறுப்பு நிதி மூலம் வழங்கப்பட்டன.
அவற்றை நிர்வாக இயக்குநரும் தலைமை செயல் அதிகாரியுமான பினோத் குமார் வழங்க, இருப்பிட மருத்துவ அலுவலர் (ஆர்எம்ஓ) டாக்டர் வாசுதேவன் பெற்றுக் கொண்டார்.
Hindusthan Samachar / V.srini Vasan