Enter your Email Address to subscribe to our newsletters

ஆகமதாபாத், 31 அக்டோபர் (ஹி.ச.)
சர்தார் வல்லபாய் படேலின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு, குஜராத்தில் உள்ள நர்மதா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள 597 அடி உயர சிலைக்கு பிரதமர் மோடி இன்று (அக் 31) காலை மரியாதை செலுத்தினார்.
அப்போது வல்லபாய் படேலின் சிலைக்கு ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவப்பட்டன. பின்னர், பிரதமர் மோடிக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அதனை அவர் ஏற்றுக்கொண்டார்.
பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:
சர்தார் வல்லபாய் படேலின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு 140 கோடி இந்தியர்களுக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். வரலாற்றை எழுதுவதில் நேரத்தை வீணாக்காமல் அதை உருவாக்குவதில் நாம் நேரத்தை வீணாக்க வேண்டும் என்று சர்தார் படேல் நம்பினார்.
இந்தியாவை ஒன்றிணைப்பதன் மூலம் அவர் வரலாற்றைப் படைத்தார். சுதந்திரத்திற்குப் பிறகு, 550க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை இந்தியா உடன் இணைப்பது சாத்தியமற்றது. இந்த பணியை வல்லபாய் படேல் நிறைவேற்றினார்.
ஊடுருவலுக்கு எதிராக தீவிர போராட்டத்தை மேற்கொள்ள இந்தியா முடிவு செய்துள்ளது. நாட்டிலிருந்து ஒவ்வொரு ஊடுருவல்காரரையும் வெளியேற்றுவதற்கு நாம் உறுதிமொழி எடுக்க வேண்டும். சர்தார் வல்லபாய் படேல் முழு காஷ்மீரையும் இந்தியாவுடன் ஒருங்கிணைக்க விரும்பினார். ஆனால் பிரதமர் ஜவஹர்லால் நேரு அதை அனுமதிக்கவில்லை.
2014ம் ஆண்டு முதல் நக்சலிசம் மற்றும் மாவோயிஸ்ட் பயங்கரவாதத்திற்கு பாஜ அரசு பலத்த அடியை கொடுத்து வருகிறது. அச்சுறுத்தலை நாங்கள் துடைத்தெறிவோம். காங்கிரஸ் பிரிட்டிஷாரிடமிருந்து அடிமை மனநிலையை பெற்றது.
காங்கிரஸ் கட்சியின் பலவீனமான கொள்கைகளால், காஷ்மீரின் ஒரு பகுதி பாகிஸ்தானின் சட்டவிரோத ஆக்கிரமிப்பிற்குள் சென்றது. நக்சல் பயங்கரவாதம் முழுமையாக ஒடுக்கப்படுகிறது.
தேசிய பாதுகாப்பு விவகாரத்தில் எந்த சமரசமும் கிடையாது. பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு இந்தியாவின் வலிமை காட்டப்பட்டு உள்ளது. ஓட்டு வங்கி அரசியலுக்காக நாட்டின் பாதுகாப்பை முந்தைய அரசாங்கம் சமரசம் செய்து கொண்டது.
ஊடுருவல்காரர்களால் நமது நாட்டின் ஒற்றுமை, உள்நாட்டு பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளது. தேசிய ஒருமைப்பாட்டை பாதுகாக்க நாடு தற்போது உறுதியான, தீர்க்கமான நிலைப்பாட்டை எடுத்துள்ளது.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
Hindusthan Samachar / vidya.b