மைத்துனரைக் கொன்று 400 அடி ஆழத்தில் வீச்சு- ஸ்கூபா டைவிங் வீரர்கள் மூலம் உடல் மீட்பு!
நெல்லை, 31 அக்டோபர் (ஹி.ச.) நெல்லை அருகே மைத்துனரைக் கொன்று 400 அடி ஆழ கல்வெட்டான் குழியில் வீசிய சம்பவத்தில், உடலை மீட்கும் பணி இரண்டாவது நாளாக தீவிரமடைந்துள்ளது. குழியின் அபாயகரமான ஆழம் காரணமாக, சிறப்பு ஸ்கூபா டைவிங் வீரர்கள் வரவழைக்கப்பட்டு,
Death


நெல்லை, 31 அக்டோபர் (ஹி.ச.)

நெல்லை அருகே மைத்துனரைக் கொன்று 400 அடி ஆழ கல்வெட்டான் குழியில் வீசிய சம்பவத்தில், உடலை மீட்கும் பணி இரண்டாவது நாளாக தீவிரமடைந்துள்ளது.

குழியின் அபாயகரமான ஆழம் காரணமாக, சிறப்பு ஸ்கூபா டைவிங் வீரர்கள் வரவழைக்கப்பட்டு, சுழற்சி முறையில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

பாளையங்கோட்டை மேலப்பாட்டத்தைச் சேர்ந்தவர் பெருமாள், 24. இவரது அக்காள் கணவர் வெள்ளப்பாண்டி, 29. வெள்ளப்பாண்டி சரிவர வேலைக்குச் செல்லாததால், கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு, பெருமாளின் அக்காள் சுதா, பெற்றோர் வீட்டிற்குச் சென்றுவிட்டார்.

இது தொடர்பாகப் பேச, வெள்ளப்பாண்டி தனது மைத்துனர் பெருமாளை மேலப்பாட்டம் கல்வெட்டான் குழி பகுதிக்கு வரவழைத்துள்ளார். அங்கு நண்பர் மதுபாலன், 22, என்பவருடன் மது அருந்தியபோது ஏற்பட்ட வாக்குவாதத்தில், பெருமாளை அடித்து, அரிவாளால் வெட்டி, லுங்கியால் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளனர். பின்னர், உடலை கல்வெட்டான் குழியில் வீசிவிட்டுச் சென்றுள்ளனர்.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக, வெள்ளப்பாண்டி மற்றும் மதுபாலன் ஆகிய இருவரையும் பாளையங்கோட்டை தாலுகா போலீசார் கைது செய்தனர்.

குழியில் வீசப்பட்ட பெருமாளின் உடலை மீட்க, நேற்று தீயணைப்புத் துறையினர் வரவழைக்கப்பட்டனர். ஆனால், குழி சுமார் 400 அடி ஆழம் கொண்டதாலும், வெளிச்சமின்மையாலும் நேற்று தேடுதல் பணி கைவிடப்பட்டது.

சுழற்சி முறையில் தேடும் ஸ்கூபா வீரர்கள்

இன்று இரண்டாவது நாளாக தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குழியின் ஆழம் மிகவும் அதிகம் என்பதாலும், நீரின் அழுத்தம் மற்றும் குளிர் காரணமாகவும், சாதாரண வீரர்களால் தேட இயலவில்லை. இதையடுத்து, சிறப்பு பயிற்சி பெற்ற ஸ்கூபா டைவிங் வீரர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.

ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் மற்றும் நவீன கருவிகளுடன், ஸ்கூபா டைவிங் வீரர்கள் குழியில் இறங்கினர். ஆழம் அதிகமாக இருப்பதால், வீரர்கள் ஒருவர்பின் ஒருவராக, சுழற்சி முறையில் குழியில் இறங்கி உடலைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். தற்போது அவரது உடல் அங்கிருந்து மீட்கப்பட்டது.

Hindusthan Samachar / ANANDHAN