Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 31 அக்டோபர் (ஹி.ச.)
நெல் மூட்டைகளை ஏற்றிச் செல்லும் லாரி போக்குவரத்து ஒப்பந்தத்தின் மீது எழுந்திருக்கும் முறைகேடு புகாரை சரியான முறையில் விசாரித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் எக்ஸ் தளத்தில் இன்று (அக் 31) கூறியிருப்பதாவது,
நெல் மூட்டைகளை ஏற்றிச் செல்லும் லாரி போக்குவரத்து ஒப்பந்தத்தில் ரூ.160 கோடி முறைகேடு புகார் - விரிவான விசாரணை நடத்தி தொடர்புடைய அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை நுகர்பொருள் வாணிபக்கழக குடோன்கள், அரவைத் தொழிற்சாலைகள் மற்றும் பிற மாவட்டங்களுக்குக் கொண்டு செல்வதற்குப் பயன்படுத்தப்படும் லாரி போக்குவரத்து ஒப்பந்தத்தில் சுமார் 160 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு ஏற்பட்டிருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
நெல் கொள்முதல் நிலையங்களிலிருந்து நெல் மூட்டைகளை ஏற்றிச் செல்ல டன் ஒன்றுக்கு 598 ரூபாயை வாடகை கட்டணமாகத் தமிழக அரசு நிர்ணயித்திருக்கும் நிலையில், குறிப்பிட்ட ஒப்பந்த நிறுவனங்கள் 186 ரூபாய் மட்டுமே தங்களுக்கு வழங்குவதாக லாரி உரிமையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அதோடு, நெல் கொள்முதல் செய்யப்பட்ட 48 மணிநேரங்களில் கிடங்குகளுக்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும் என அரசு உத்தரவு பிறப்பித்திருக்கும் நிலையில், 30 முதல் 40 நாட்களாகக் கொள்முதல் நிலையங்களிலேயே தேங்கியிருக்கும் நெல் மூட்டைகளால் விவசாயிகளின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே, தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட லாரி போக்குவரத்து ஒப்பந்தத்தின் மீது எழுந்திருக்கும் முறைகேடு புகாரை விசாரிப்பதோடு, விதிமுறைகள் மீறப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b