Enter your Email Address to subscribe to our newsletters

திருவண்ணாமலை, 31 அக்டோபர் (ஹி.ச.)
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை மாநகரில் அமைந்துள்ள அருணாசலேஸ்வரர் கோவிலின் நான்கு மாட வீதிகளில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வந்ததால் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மாட வீதியில் இருந்த 8 பலி பலிபீடங்களும் அங்கிருந்து அகற்றப்பட்டது, இந்நிலையில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி 90% நிறைவடைந்ததால் அதே இடத்தில் மீண்டும் பிரதிஷ்டை செய்யப்பட்ட 8 பலிபீடங்களுக்கு மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
முன்னதாக அருணாசலேஸ்வரர் கோவிலில் ஐந்தாம் பிரகாரத்தில் உள்ள கல்யாண சுந்தரேஸ்வரர் சன்னதி முன்பு யாக சாலை அமைத்து கணபதி ஹோமத்தை தொடர்ந்து அத்தி பலகைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க முதல் கால யாக பூஜை நடைபெற்றது, அதனைத் தொடர்ந்து இன்று காலை இரண்டாம் கால யாக பூஜை செய்து பூரணாஹுதி நடைபெற்று புனித நீர் ஊற்றப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து புனித நீரை மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு அருணாச்சலேஸ்வரர் கோவிலின் ராஜகோபுரம் முன்பு உள்ள 16 கால் மண்டபம் எதிரே பிரதிஷ்டை செய்யப்பட்ட பலிபீடத்திற்கு புனித நீர் ஊற்றி சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இந்திரலிங்கம், கடலைக்கடை சந்திப்பு, கற்பக விநாயகர் கோவில், திருவூடல் தெரு, குபேர விநாயகர் கோயில், பூத நாராயணப் பெருமாள் உள்ளிட்ட 8 திசைகளிலும் பிரதிஷ்டை செய்யப்பட்ட 8 பலிபீடங்களுக்கு புனித நீர் ஊற்றி தீப ஆராதனை காண்பிக்கப்பட்டு மகா கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது.
இந்த விழாவில் ஆன்மீக பக்தர்கள் கலந்து கொண்டு அண்ணாமலையாரை வழிபட்டனர்.
Hindusthan Samachar / ANANDHAN