Enter your Email Address to subscribe to our newsletters

விழுப்புரம், 31 அக்டோபர் (ஹி.ச.)
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள குறிஞ்சிப்பை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சேகர்(38) குடும்பத்திற்கும், அதே கிராமத்தைச் சேர்ந்த மற்றொரு விவசாயி ஏழுமலை(49) குடும்பத்திற்கும் இடையே நிலத் தகராறு காரணமாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் இருக் குடும்பத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் விவசாயி ஏழுமலை மற்றும் அவரது மகன்களான கிருஷ்ணன்(20), அரவிந்தசாமி(19) ஆகிய 3 பேரும் சேர்ந்து விவசாயி சேகரை கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களால் வெட்டிக் கொலை செய்தனர்.
இது தொடர்பாக செஞ்சி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விவசாயி சேகரை வெட்டிக் கொலை செய்த ஏழுமலை மற்றும் அவரது 2 மகன்கள் உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு விசாரணை திண்டிவனத்தில் உள்ள முதலாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 9 மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் வழக்கு விசாரணை நிறைவடைந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதில் நிலத் தகராறில் விவசாயி சேகரை வெட்டி கொலை செய்த ஏழுமலை மற்றும் அவரது மகன்களான கிருஷ்ணன், அரவிந்தசாமி உள்ளிட்ட 3 பேருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து திண்டிவனம் முதலாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி முகமது பாரூக் தீர்ப்பளித்தார். கொலை சம்பவம் நடைபெற்ற 9 மாதங்களிலேயே வழக்கு விசாரணை முடிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
Hindusthan Samachar / ANANDHAN