Enter your Email Address to subscribe to our newsletters

பாட்னா, 31 அக்டோபர் (ஹி.ச.)
பீஹாரில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சி தற்போது நடைபெற்று வருகின்றது.
243 தொகுதிகள் கொண்ட இம்மாநில சட்ட சபைக்கு இரு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்ட தேர்தல் வரும் நவ., 6ம் தேதி 121 தொகுதிகளுக்கு நடைபெறவுள்ளது.
நவ.14ஆம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. முதற்கட்ட தேர்தலுக்கான பிரசாரம் நவ.4ஆம் தேதி மாலை 5 மணிக்கு நிறைவு பெறுகிறது. எனவே அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 28-ந்தேதி எதிர்க்கட்சிகள் அடங்கிய ‘இந்தியா’ கூட்டணியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் பீகார் தேர்தலுக்கான பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் அறிக்கை இன்று (அக் 31) வெளியிடப்பட்டுள்ளது.
பீகார் முதல்வர் நிதிஷ்குமார், துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி, பாஜக தலைவர் ஜே.பி. நட்டா மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் இணைந்து 69 பக்க தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.
அதன் விபரம் பின்வருமாறு:
4 நகரங்களில் மெட்ரோ ரெயில் சேவைகள் தொடங்கப்படும்.
பீகாரில் ஏழு சர்வதேச விமான நிலையங்கள் அமைக்கப்படும்.
பீகாரில் 10 புதிய தொழில் பூங்காக்கள் திறக்கப்படும்
தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கே.ஜி. முதல் பி.ஜி. வரை கல்வி இலவசம்
பெண்கள் தொழில் தொடங்க ரூ.2 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படும்
ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும்.
பீகாரின் ஒவ்வொரு மாவட்டத்திலும் திறன் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும்.
விவசாயிகளுக்கு நிதியுதவி ரூ.6,000ல் இருந்து ரூ.9,000ஆக உயர்த்தப்படும்.
பீகார் பள்ளிகளில் மதிய உணவுடன் காலை உணவும் வழங்கப்படும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b