Enter your Email Address to subscribe to our newsletters

கரூர், 1 நவம்பர் (ஹி.ச.)
கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் மாதம்
27-ம் தேதி நடைபெற்ற தவெக பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
மேல் 110 பேர் காயமடைந்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக கரூர் நகர காவல் ஆய்வாளர் மணிவண்ணன் அளித்த புகாரின் பேரில் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணைச் செயலாளர் நிர்மல் குமார், மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கடந்த மாதம் 17-ம் தேதி முதல் விசாரணை மேற்கொண்டு வரும் சிபிஐ அதிகாரிகள் நேற்று (அக் 31) வேலுச்சாமி புறத்தைச் சேர்ந்த கடைகளின் உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
நேற்று சிபிஐ அதிகாரிகள் சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டு நவீன கருவியான 3டி லேசர் ஸ்கேனருடன் ஆய்வு செய்தனர்.
ஆய்வின்போது போக்குவரத்து இடையூறு ஏற்படாத வகையில் கரூர் ஈரோடு சாலையில் முனியப்பன் கோயிலில் இருந்து கோதூர் பிரிவு சாலை வரை தடுப்பு வேலைகள் அமைக்கப்பட்டது.
தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று (நவ 01) காலை 7 மணிக்கு சிபிஐ அதிகாரிகள் வேலுச்சாமி புரத்திற்கு சென்று, நேற்று நடத்திய ஃபாரோபோக்கஸ் கருவி மூலம் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொண்டனர்.
இவ்வழக்கில் எஸ்ஐடி குழு, தனி நபர் குழு மற்றும் பொதுமக்கள் அளித்த பல்வேறு வாக்குமூலங்கள் அடிப்படையிலும், வீடியோ ஆதாரங்களின் அடிப்படையிலும் விசாரணை மேற்கொண்டு வரும் சிபிஐ அதிகாரிகள் வீடியோ ஆதாரங்களை மிகத் துல்லியமாக ஒப்பீடு செய்யும் 3டி லேசர் ஸ்கேனர் கருவியை பயன்படுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் சிபிஐ அதிகாரிகள் பணிகள் மேற்கொள்ளும் இடம் கரூர் ஈரோடு சாலை என்பதால் அப்பகுதியில் இருந்து பணிக்கு செல்லும் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் தடுப்பு வேலி அமைத்திருந்தனர்.
இதனால் அலுவலகங்கள் மற்றும் வேலைக்கு விரைவில் செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டதால் தடுப்பு வேலியை அகற்றுமாறு சிபிஐ அதிகாரிகள், போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் அவர்களை சமாதானம் செய்து மாற்று வழியாக கோவை சாலைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Hindusthan Samachar / vidya.b