Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 1 நவம்பர் (ஹி.ச.)
இயக்குனர் வி. சேகர் படங்களுக்கு என்றே தமிழ் சினிமாவில் தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது.
பாலசந்தர், விசுவை போல குறைந்த பட்ஜெட்டில் நல்ல குடும்ப கதைகளையும் சமூக அக்கறை உள்ள படங்களையும் பொண்டாட்டியை மதிக்க வேண்டும், பெண்களை போற்ற வேண்டும் என்கிற மையக்கருவை காமெடி கலந்து தனது திரைப்படங்களில் கொடுத்து வந்தவர் தான்
வி. சேகர்.
ஆரம்பத்தில், கவுண்டமணி - சரளா என ஜோடி பொருத்தம் இருந்தது. அதன் பின்னர், செந்தில் - சரளா என மாறியது. கடைசியாக வடிவேலு - சரளா என ஜோடி பொருத்தம் உருவாக காரணமாக இருந்ததே
வி. சேகர் தான்.
பாக்கியராஜிடம் உதவி இயக்குநராக 1987ம் ஆண்டு வெளியான எங்க சின்ன ராசா படத்தில் பணியாற்றிய வி. சேகர் 1990ம் ஆண்டு தனது இயக்கத்தில் நீங்களும் ஹீரோதான் படத்தை இயக்கி இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
நிழல்கள் ரவி, சில்க் ஸ்மிதா, கவுண்டமணி மற்றும் செந்தில் அந்த படத்தில் நடித்திருந்தனர்.
அதன் பின்னர், பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும், ஒண்ணா இருக்க கத்துக்கணும், பொறந்த வீடா புகுந்த வீடா, வரவு எட்டணா செலவு பத்தணா, காலம் மாறிப்போச்சு, விரலுக்கு ஏத்த வீக்கம், எல்லாமே என் பொண்டாட்டிதான், கூடி வாழ்ந்தால் கோடி நன்மை, வீட்டோட மாப்பிள்ளை உள்ளிட்ட பல படங்களை இயக்கி ஏகப்பட்ட மக்களை கவர்ந்தார்.
இந் நிலையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு இதயத்தில் அடைப்பு ஏற்பட்டது.
உடனடியாக ராமச்சந்திரா மருத்துவமனைக்கு குடும்பத்தினர் கொண்டு சேர்த்தனர்.
மூளைக்கு செல்ல வேண்டிய ரத்தம் செல்லாமல் இருப்பதால் விழி மூடிய நிலையிலேயே அவர் இருக்கிறார்.
இது குறித்து இயக்குனர் வி. சேகர் மகன் காரல் மார்க்ஸ் சேகர் தெரிவித்ததாவது,
தமிழ் மக்களே.
என் தந்தையும், மக்கள் இயக்குநரும், குடும்ப இயக்குநரும், திருவள்ளுவர் கலைக்கூடம் தயாரிப்பாளருமான V.சேகர் தற்போது தன் உயிருக்காக ராமச்சந்திரா மருத்துவமனையில் போராடிக் கொண்டிருக்கிறார்.
அவர் விரைவில் உடல் நலம் பெற அன்பின் ஒளியாக ஒரு தீபம் ஏற்றி இறைவனை மனமார வேண்டிக் கொள்ளுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன் என அவரது மகன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ