Enter your Email Address to subscribe to our newsletters

திருவனந்தபுரம், 1 நவம்பர் (ஹி.ச.)
சபரிமலையில் நடப்பு மண்டல, மகரவிளக்கு சீசனை முன்னிட்டு, பக்தர்களுக்கு வழங்க 15 லட்சம் டின் அரவணை தயார் நிலையில் இருப்பதாக மந்திரி வாசவன் தெரிவித்தார்.
சபரிமலையில் வருகிற 17-ந் தேதி மண்டல சீசன் தொடங்குகிறது. இதையொட்டி 16-ந் தேதி மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது.
டிசம்பர் மாதம் 27-ந் தேதி மண்டல பூஜையும், அடுத்த ஆண்டு (2026) ஜனவரி மாதம் 14-ந் தேதி மகரவிளக்கு பூஜையும் நடக்கிறது.
இந்த நிலையில் திருவனந்தபுரத்தில் தேவஸ்தான மந்திரி வாசவன் தலைமையில் சபரிமலை சீசன் தொடர்பான ஆய்வு கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்த போது கூறியதாவது:-
சபரிமலையில் நடைபெற்ற அய்யப்ப பக்த சங்கமம், ஜனாதிபதி வருகை ஆகியவற்றை தொடர்ந்து நடப்பு சீசனையொட்டி பக்தர்களை வரவேற்க சபரிமலை ஏற்கனவே தயாராகி விட்டது.
ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வரும் பக்தர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
பக்தர்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் வழங்க தற்போது 15 லட்சம் டின் அரவணை இருப்பில் உள்ளது. சீசன் தொடங்குவதற்கு முன்னதாக அதாவது நவம்பர் மாதம் 15-ந் தேதிக்கு முன்னதாக 50 லட்சம் டின் அரவணை மற்றும் அப்பம் பாக்கெட்டுகள் தயார் செய்யப்பட்டு இருப்பு வைக்கப்படும்.
சீசனை முன்னிட்டு கேரளாவின் அனைத்து பகுதிகளில் இருந்தும் கேரள அரசு போக்குவரத்து கழகத்தின் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். இதில் முதற்கட்டமாக 500 பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அய்யப்ப பக்தர்களின் மருத்துவ வசதிக்காக 24 மணி நேரமும் செயல்படும் 15 சிறப்பு மையங்கள் அமைக்கப்படும். இது தவிர மாவட்ட, தாலுகா அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / JANAKI RAM