Enter your Email Address to subscribe to our newsletters

திருவனந்தபுரம், 1 நவம்பர் (ஹி.ச.)
கேரள மாநிலம் உருவான தினத்தை முன்னிட்டு சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்றது.
இந்த சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தில் கேரள முதல்வர் பேசியதாவது,
கேரள மாநிலம் உருவான தினமான இந்த நாள் வரலாற்றில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது, ஏனெனில் கேரளாவை தீவிர வறுமை இல்லாத முதல் இந்திய மாநிலமாக மாற்றுவதில் நாம் வெற்றி பெற்றுள்ளோம்.
இந்த சட்டப்பேரவை பல வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டங்கள் மற்றும் கொள்கை அறிவிப்புகளைக் கண்டுள்ளது.
வளர்ச்சியடைந்த கேரளாவை உருவாக்குவதில் மற்றொரு மைல்கல்லைக் குறிக்கும் தருணத்தில் சட்டப்பேரவை இன்று கூடியுள்ளது.
2021 ஆம் ஆண்டு புதிய அமைச்சரவை பதவியேற்ற பிறகு நடைபெற்ற முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகளில் ஒன்று தீவிர வறுமை ஒழிப்பு.
சட்டப்பேரவை தேர்தலின் போது மக்களுக்கு அளிக்கப்பட்ட மிக முக்கியமான வாக்குறுதிகளில் ஒன்றை நிறைவேற்றுவதற்கான தொடக்கமாகவும் அது அமைந்தது.
இந்தியாவில் 100 சதவீத கல்வியறிவை அடைந்த முதல் மாநிலம், டிஜிட்டல் கல்வியறிவு பெற்ற முதல் மாநிலம் மற்றும் முழுமையாக மின்சாரம் பெற்ற மாநிலம் ஆகிய பெருமைகளை பெற்ற கேரளா, மக்களை தீவிர வறுமையிலிருந்து மீட்க பல முயற்சிகளை எடுத்துள்ளது.
ரூ.1,000 கோடிக்கும் அதிகமான முதலீட்டில், கேரள மாநில அரசு 20,648 குடும்பங்களுக்கு தினசரி உணவை உறுதி செய்தது, அவர்களில் 2,210 பேருக்கு சூடான உணவு வழங்கப்பட்டது. மேலும், 85,721 நபர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை மற்றும் ஆயிரக்கணக்கானோருக்கு வீட்டுவசதி ஆகியவற்றையும் அரசு உறுதி செய்தது.
தீவிர வறுமையை ஒழிக்கும் நோக்கில் 5,400க்கும் மேற்பட்ட புதிய வீடுகள் கட்டப்பட்டுள்ளன என்றும், 5,522 வீடுகள் பழுதுபார்க்கப்பட்டுள்ளன என்றும், 2,713 நிலமற்ற குடும்பங்கள் வீடு கட்ட நிலம் பெற்றுள்ளன. இது தவிர, 21,263 பேர் முதல் முறையாக ரேஷன் கார்டுகள், ஆதார் மற்றும் ஓய்வூதியம் போன்ற அத்தியாவசிய ஆவணங்களைப் பெற்றனர் என்றும், மேலும் 4,394 குடும்பங்களுக்கு வாழ்வாதாரத் திட்டங்கள் கிடைத்துள்ளன.
மேலும், தீவிர வறுமையை ஒழிக்க ஒரே மாதிரியான கொள்கைக்கு பதிலாக, அரசாங்கம் 64,006 பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களை அடையாளம் கண்டு, ஒவ்வொருவரின் தனித்துவமான தேவைகளுக்கும் குறிப்பிட்ட நுண் திட்டங்களை உருவாக்கியது.
இவ்வாறு அவர் பேசினார்.
சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியதும் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் வி.டி. சதீசன், முதல்வரின் இந்த அறிவிப்பு முழுமையான மோசடி.
இது அவை விதிகளை அவமதிக்கும் வகையில் உள்ளது. நாங்கள் இதனை ஏற்க முடியாது, எனவே கூட்டத்தொடரை முற்றிலுமாகப் புறக்கணிக்கிறோம் என்று கூறினார்.
பின்னர் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி சட்டப்பேரவையிலிருந்து எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.
Hindusthan Samachar / vidya.b