Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 1 நவம்பர் (ஹி.ச.)
கடந்த 2021 ஆம் ஆண்டு மதுரை ஆதீனத்தின் 293-வது ஆதீனமாக மதுரை ஆதீனம் ஶ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் முடிசூட்டப்பட்டு பல்வேறு சைவ சமய பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் கடந்த மே மாதம் 2 ஆம் தேதி, சென்னை காட்டாங்கொளத்தூரில் நடைபெற்ற சைவ சித்தாந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மதுரை ஆதீனம் காரில் சென்றபோது, உளுந்தூர்பேட்டை பகுதியில் சாலையில் மற்றொரு கார் தன் கார் மீது மோதி விபத்து ஏற்பட்டதாகவும், தன்னை சிலர் கொலை செய்ய முற்பட்டதாக கூறி மதுரை ஆதீனம் குற்றச்சாட்டு வைத்திருந்தார்.
அதில் குறிப்பாக குல்லா மற்றும் தாடி வைத்த நபர்கள் கொலை செய்ய முயற்சித்ததாக கூறியிருந்தார். இது தொடர்பாக உளுந்தூர்பேட்டை பகுதியில் நடைபெற்ற விபத்து குறித்த சி.சி.டி.வி., காட்சியை காவல்துறை தரப்பில், வெளியிடப்பட்டு தவறான தகவல்களை மதுரை ஆதீனம் தரப்பினர் வெளியிடுவதாக, கூறி அறிக்கை வெளியிட்டனர்.
வாகன விபத்து குறித்து தவறான தகவல்களை பரப்பி மதமோதலை தூண்டும் வகையில் பேசிய மதுரை ஆதீனத்தின் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்ய கோரி, சென்னை எழுப்பூர் அருகே உள்ள அயனாவரத்தைச் சேர்ந்த உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ராஜேந்திரன் என்பவர் அளித்து இருந்தார் .
இந்த புகாரின் கீழ் சென்னை கிழக்கு மண்டலம் சைபர் கிரைம் காவல்துறையினர், மதுரை ஆதீனம் ஞானசம்பந்தர் தேசிக பரமாச்சாரியார் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் முன்ஜாமின் கோரி மதுரை ஆதினம், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு செய்தார்.
அப்போது மதுரை ஆதீனத்திற்கு 60 வயதுக்கு மேலே ஆனதால் நேரில் ஆஜராக கட்டாயம் இல்லை, காவல்துறையினர் நேரில் சென்று விசாரணை செய்து கொள்ளலாம் எனவும் காவல்துறையின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மதுரை ஆதீனத்துற்கு நிபந்தனையுடன் முன்ஜாமின் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து ஜூலை 20 ஆம் தேதியன்று, மதுரை தெற்கு ஆவணி மூல வீதி பகுதியில் உள்ள மதுரை ஆதின மடத்திற்கு நேரில் வருகை தந்த சென்னை கிழக்கு மண்டல சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் பத்மகுமாரி தலைமையிலான காவல்துறையினர், மதுரை ஆதினத்திடம் ஒரு மணி நேரம் தனியாக விசாரணையை நடத்தினர்.
மதுரை ஆதினம் ஹெர்னியா (குடல் இறக்க) அறுவை சிகிச்சை முடிவடைந்து மருத்துவ ஓய்வு எடுத்துவரும் நிலையில், படுக்கையில் படுத்திருக்கும் நிலையில், சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் இன்று 2 ஆவது முறையாக சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
மதுரை ஆதின மடத்தில் மதுரை ஆதீனத்திடம் சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணைக்கு வருகை தந்த நிலையில், ஆதீனம் மடத்திற்குள்மற்றவர்கள் யாரும் இருக்கக் கூடாது என காவல்துறையினர் அறிவுறுத்தினர்.
Hindusthan Samachar / ANANDHAN