பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் – தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன்
சென்னை, 1 நவம்பர் (ஹி.ச) தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் ராஜராஜ சோழன் பிறந்த நாள் விழா மற்றும் தமிழ்நாடு நாள் நிகழ்ச்சி சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவ
Velmurugan


சென்னை, 1 நவம்பர் (ஹி.ச)

தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் ராஜராஜ சோழன் பிறந்த நாள் விழா மற்றும் தமிழ்நாடு நாள் நிகழ்ச்சி சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ,

பீகார் தேர்தல் பிரச்சாரத்தின்போது பிரதமர் மோடி, தமிழ்நாட்டில் பீகாரிகள் துன்புறுத்தப்படுவதாகவும், அச்சுறுத்தப்படுவதாகவும் பேசியிருப்பதற்கு கண்டனங்களை தெரிவித்தார்.

தமிழகத்தில் வடமாநிலத் தொழிலாளர்கள் எவ்விதத் தொந்தரவுமின்றி நிம்மதியுடனும், நலமுடனும் பணி செய்து, தங்கள் குடும்பங்களுக்கு மகிழ்ச்சியுடன் பணம் அனுப்பி வைக்கின்றனர் என்றும் பல ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியான பேட்டிகளில், அவர்களுக்கு இங்கே அதிக ஊதியம் மற்றும் எந்தக் குறையும் இல்லை என்று அவர்களே உறுதிப்படுத்தியுள்ளனர் என்று தெரிவித்தார்.

தேர்தல் அரசியலுக்காகத் தமிழ்நாட்டின் மாண்பைச் சிதைக்கும் முயற்சியில் ஈடுபட்ட பிரதமர் நரேந்திர மோடி, தமிழர்களிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றார். மேலும் பிரதமர் நரேந்திர மோடி திமுக வைத்தான் குற்றம் சாட்டினார் என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கருத்துக்கு பதில் அளித்த வேல்முருகன் திமுகவை குற்றம் சாட்டினாலும் தமிழர்களை குற்றம் சாட்டுவதாக தான் அர்த்தம் என்று கூறினார்.

தமிழ்நாட்டின் உரிமைகள் பாதுகாக்கப்பட, மாநிலத்தில் வேலை வாய்ப்புகள் குறித்து உறுதியான சட்டம் தேவை என்று வலியுறுத்தினார். தமிழக அரசு, வருகின்ற சட்டமன்றக் கூட்டத்தொடரில், இந்திய மாநிலங்கள் முழுவதும் அந்தந்த மாநில மக்களுக்கு 100% வேலைவாய்ப்பை உறுதி செய்யும் சட்டத்தை இயற்ற வேண்டும்.

அதேபோல், தமிழ்நாட்டிலும் 100% தமிழர்களுக்கே வேலை என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றார்.

ஒன்றிய அரசுப் பதவிகளிலும் அந்தந்த மாநில மக்களுக்கே 90% வேலைவாய்ப்பை உறுதி செய்யும் சட்டத்தை இயற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மேலும் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர்,

அதிமுகவில் உள்ள முன்னணி தலைவர்களை அக்கட்சி தலைமை நீக்குவது தமிழக அரசியலுக்கு நல்லது அல்ல என்றும் தமிழ்நாட்டில் திமுக அதிமுக வலுவாக இருந்தால்தான் தமிழகத்தின் உரிமைகள் மீட்கப்படும் என்றார்.

மேலும் அதிமுகவை பாஜக அமலாக்கத்துறை வைத்து பணிய வைத்து வருவதாகவும் ஒரு கட்சியை பலவீனப்படுத்தினால் அக்கட்சியை எளிதில் சிதறடிக்கப்படும் என்றும் அந்த முயற்சியை தொடர்ச்சியாக பாஜக செய்து வருவதாக குற்றம் சாட்டினார்.

ஈழத்தில் நடைபெற்றது மாபெரும் இனப்படுகொலை என அறிவித்து, சர்வதேச நீதி விசாரணைக்கு வழிவகை செய்ய வேண்டும் என்றும் கிழக்கு திமூர் மற்றும் தெற்கு சூடான் வழியில் ஐக்கிய நாடுகளின் சபை மூலம் பொது வாக்கெடுப்பு நடத்தி, தனித்தமிழ் ஈழ அரசை உருவாக்க ஒன்றிய அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்ற தமிழக முதல்வரை வலியுறுத்தினார். சாதிய ஏற்றத்தாழ்வுகள் மற்றும் தீண்டாமைகளைத் தடுக்க, உடனடியாகச் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி, அனைத்துச் சாதியினருக்கும் சம நீதியுடன் கூடிய சம வாய்ப்பை வழங்க வேண்டும்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு மாறாக, ஒருசில அதிகாரிகள் தமிழ்நாட்டில் செயல்படுகிறார்கள் என்றும், அவர்கள் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தின் அடிப்படையில் செயல்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

இந்த அதிகாரிகள் வடமாநிலத்தவருக்கு வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை போன்றவற்றை வாங்கிக் கொடுத்து, தமிழகத்தின் அரசியல் பண்பாட்டு வெளிமைகளை உடைக்கத் திட்டம் தீட்டுவதாகவும், அத்தகைய அதிகாரிகளை இனம் கண்டு களை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Hindusthan Samachar / P YUVARAJ