Enter your Email Address to subscribe to our newsletters

சபரிமலை, 1 நவம்பர் (ஹி.ச.)
இந்தாண்டுக்கான சபரிமலை மண்டல காலம் நவ., 17 ல் துவங்குகிறது. இதற்காக நவ., 16 மாலை 5:00 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.
62 நாட்கள் தொடர்ச்சியாக நடக்கும் இந்த சீசனில் பக்தர்கள் தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு இன்று மாலை 5:00 மணிக்கு துவங்குகிறது.
sabarimalaonline.org என்ற இணையதளத்தில் பக்தர்கள் முன்பதிவு செய்யலாம்.
தினமும் 70 ஆயிரம் பக்தர்களுக்கு ஆன்லைன் மூலமும், 20 ஆயிரம் பக்தர்களுக்கு ஸ்பாட் புக்கிங் மூலமும் அனுமதி வழங்கப்படுகிறது.
பக்தர்களுக்கான விபத்து இன்சூரன்ஸ் திட்டம் கடந்த ஆண்டு நான்கு மாவட்டங்களில் மட்டுமே அமல்படுத்தப்பட்டிருந்தது. இந்த ஆண்டு கேரளாவில் எந்த பகுதியில் விபத்து நடந்தாலும் ரூ.5 லட்சம் ரூபாய் காப்பீடு கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இன்சூரன்ஸ் திட்டம் சபரிமலையில் பணிபுரியும் தேவசம்போர்டு நிரந்தர மற்றும் தினக்கூலி பணியாளர்களுக்கும் பிற அரசுத்துறை ஊழியர்களுக்கும் விரிவாக்கமும் செய்யப்பட்டுள்ளது.
சபரிமலை பயணத்தில் மரணமடையும் பக்தர்களின் உடலை கேரளாவுக்குள் கொண்டு செல்ல ரூ.30 ஆயிரமும், வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்ல ரூ.ஒரு லட்சமும் ஆம்புலன்ஸ் கட்டண தொகையாக வழங்கப்படும்.
நிலக்கல் முதல் சன்னிதானம் வரை உள்ள பாதைகளில் மாரடைப்பு உள்ளிட்ட நோய்களில் மரணம் அடையும் பக்தர்களுக்கு இதுவரை உதவித்தொகை வழங்கப்படவில்லை.
இந்தாண்டு இவ்வாறு மரணம் அடைபவர்களுக்கு ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்கப்படும். இதற்காக விருச்சுவல் கியூ முன்பதிவில் பக்தர்களின் விருப்பத்திற்கு ஏற்ப நிதி வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்சூரன்ஸ் உதவித்தொகை கிடைப்பதற்கு அடிப்படையாக ஆன்லைன் புக்கிங் முன்பதிவு கூப்பன் பரிசீலிக்கப்படும் என்பதால் அனைத்து பக்தர்களும் ஆன்லைன் முன்பதிவு செய்யும்படி திருவிதாங்கூர் தேவசம்போர்டு கேட்டுக்கொண்டுள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM