Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 1 நவம்பர் (ஹி.ச.)
மன்னன் ராஜராஜசோழனின் பெயரைத் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கு வைக்க வேண்டும் எனத் தமிழக அரசை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் இன்று (நவ 01) எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,
தஞ்சை பெருவுடையார் கோயில் எனும் அதிசயமிக்க வரலாற்றுச் சின்னத்தைக் கட்டியெழுப்பிய மாமன்னரும், தனது பொற்கால ஆட்சியின் மூலம் சோழ சாம்ராஜ்யத்தின் புகழை உச்சத்திற்குக் கொண்டு சேர்த்த பெருமைக்குரியவருமான பொன்னியின் செல்வன் ராஜராஜசோழனின் 1040வது சதயவிழா இன்று.
சோழநாட்டுப் பகுதியைச் செழுமையாகவும், வலிமையாகவும் உருவாக்கியதோடு, ஆட்சிமுறை, இராணுவம், கட்டிடக்கலை, சமயம், இலக்கியம் என அனைத்து துறைகளிலும் மலைக்க வைக்கும் சாதனைகள் புரிந்த மாமன்னர் ராஜராஜசோழனின் வீரத்தையும், ஆளுமைத் திறனையும் எந்நாளும் போற்றி வணங்கிடுவோம்.
அதே நேரத்தில், வெறும் அறிவிப்பாக மட்டுமே இருக்கும் தஞ்சை சோழர் அருங்காட்சியகப் பணிகளை விரைவுபடுத்துவதோடு, தமிழ் வளர்த்த மாமன்னன் ராஜராஜசோழனின் பெயரைத் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கு வைக்க வேண்டும் என்ற மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழக அரசை இந்நேரத்தில் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b