Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 1 நவம்பர் (ஹி.ச.)
தூத்துக்குடி மாவட்டத்தில் புத்தாக்க நிறுவனங்களுக்கு தொழில் தொடங்க முன்வருவோர் மானியம் பெற விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
வேளாண்மை மற்றும் அதை சார்ந்த துறைகளான தோட்டக்கலை, வேளாண் பொறியியல், கால்நடைத்துறை போன்றவற்றில் புத்தாக்க நிறுவனங்களுக்கு தொழில் தொடங்க முன்வருவோருக்கு மானியம் அளிப்பதாக வேளாண் நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதில் பயன்பெற விரும்புவோர்
புத்தாக்க நிறுவனம் டான்சிம் மற்றும் ஸ்டார்ட்அப் இந்தியாவில் பதிவு செய்திருக்க வேண்டும்.
கடந்த 3 ஆண்டுகளில் சராசரி லாபமானது ரூ.5 லட்சத்தை விட குறைவாக இருக்க வேண்டும். அரசிடமிருந்தோ அல்லது அரசு சார்ந்த பிற நிறுவனங்களிடமிருந்தோ எந்த கடனும் வைத்திருத்தல் கூடாது. விண்ணப்பதாரர் இந்திய நாட்டை சேர்ந்த புத்தாக்க நிறுவனமாக இருத்தல் வேண்டும். இதில் உடனடியாக உண்ணக்கூடிய பொருட்களை தயார் செய்யும் புத்தாக்க நிறுவனங்கள் பயன்பெற தகுதியானவை அல்ல.
புதிதாக தொடங்கப்பட்டுள்ள புத்தாக்க நிறுவனங்களுக்கு ஒரு பிரிவுக்கு ரூ.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. ஏற்கனவே தொடங்கப்பட்ட தொழிலை விரிவுபடுத்தி சந்தைப்படுத்த தேர்வு செய்யப்படும் புத்தாக்க நிறுவனத்துக்கு ஒரு பிரிவுக்கு ரூ.25 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது.
எனவே இதில் பயன்பெற விரும்புவோர் www.agrimark.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அதனை பூர்த்தி செய்து தூத்துக்குடி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b