குடும்பத் தகராறில் மாமியாரை வெட்டிக் கொன்ற மருமகன் கைது
திருநெல்வேலி, 1 நவம்பர் (ஹி.ச.) திருநெல்வேலியை அடுத்த சுத்தமல்லி அருகேயுள்ள நரசிங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்லப்பா. இவரது மனைவி வள்ளியம்மாள் (வயது 45). இவர்களது மகள் துர்கா. துர்காவிற்கும், முன்னீர்பள்ளம் காவல் எல்லைக்குட்பட்ட மேலச்செவல்
Murder Case


திருநெல்வேலி, 1 நவம்பர் (ஹி.ச.)

திருநெல்வேலியை அடுத்த சுத்தமல்லி அருகேயுள்ள நரசிங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்லப்பா.

இவரது மனைவி வள்ளியம்மாள் (வயது 45). இவர்களது மகள் துர்கா. துர்காவிற்கும், முன்னீர்பள்ளம் காவல் எல்லைக்குட்பட்ட மேலச்செவல் பகுதியைச் சேர்ந்த நடராஜன் மகன் ஆறுமுகநயினார் (வயது 30) என்பவருக்கும் திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆகின்றன. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், கணவன்-மனைவி இடையே நேற்று இரவு தகராறு ஏற்பட்டுள்ளது.

குடிபோதையில் இருந்த ஆறுமுகநயினார், மனைவி துர்காவுடன் சண்டையிட்டு, அவரை அவரது தாய் வீடான நரசிங்கநல்லூரில் கொண்டுவந்து விட்டுச் சென்றுள்ளார்.

மகளின் நிலை கண்டு வேதனையடைந்த வள்ளியம்மாள், மருமகன் ஆறுமுகநயினாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கண்டித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்ற ஆறுமுகநயினார், இன்று காலை மாமியார் வீட்டிற்கு நேரில் வந்துள்ளார்.

அங்கு வள்ளியம்மாளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர், தான் மறைத்து வைத்திருந்த ஆயுதத்தால் அவரை சரமாரியாக வெட்டியுள்ளார்.

இதில் வள்ளியம்மாள் ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தாயின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த துர்கா, கணவனைத் தடுக்க முயன்றுள்ளார். அப்போது அவரையும் ஆறுமுகநயினார் வெட்டியதில், துர்காவின் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது.

இந்த கொடூர சம்பவம் குறித்து தகவல் அறிந்த சுத்தமல்லி காவல்துறையினர், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், தப்பி ஓடிய ஆறுமுகநயினாரை தீவிரமாகத் தேடி, சில மணி நேரங்களிலேயே கைது செய்தனர். காயமடைந்த துர்கா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பட்டப்பகலில் நடந்த இந்த படுகொலைச் சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

கைது செய்யப்பட்ட ஆறுமுகநயினாரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / ANANDHAN