Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 10 நவம்பர் (ஹி.ச)
மாலி நாட்டில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட
5 தமிழர்களையும் உடனடியாக மீட்க வேண்டும் என பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் எக்ஸ் தளத்தில் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
மேற்கு ஆப்ரிக்க நாடான மாலியில் கடந்த சில நாள்களுக்கு முன் 5 இந்தியர்கள் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டதாக கவலையளிக்கும் செய்தி வெளியாகியிருந்த நிலையில், அவர்கள் அனைவரும் தமிழர்கள் என்றும், தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
துாத்துக்குடி மாவட்டம் ஓட்டபிடாரத்தை அடுத்த கொடியங்குளம் புதியவன், நாரைகிணறு பொன்னுதுரை, வேப்பங்குளம் பேச்சிமுத்து, தென்காசி மாவட்டம் கடைய நல்லுாரை அடுத்த முத்து கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த இசக்கிராஜா , புதுக்குடி தளபதி சுரேஷ் ஆகியோர் மும்பையைச் சேர்ந்த 'ட்ராயிங் ரெயில் லைட்டிங்' என்ற நிறுவனத்தின் சார்பில் மாலி நாட்டின் கோப்ரி நகரத்திற்கு அருகில் உள்ள தனியார் நிறுவனத்தில் மின்மயமாக்கல் பணியில் ஈடுபட்டிருந்த போது அங்கு வந்த தீவிரவாதிகள் அவர்களைக் கடத்திச் சென்றுள்ளனர்.
அவர்களைப் பற்றிய தகவல்கள் எதுவும் இதுவரை கிடைக்காததால் அவர்களின் குடும்பத்தினர் பெரும் கவலையும், அச்சமும் அடைந்துள்ளனர். கடத்தப்பட்ட ஐவரின் குடும்பங்களும் வறுமையில் வாடும் குடும்பங்கள். சொல்லிக் கொள்ளும்படி வாழ்வாதாரம் இல்லாததால் தான் ஆபத்துகள் நிறைந்த மாலி நாட்டுக்கு மிகக்குறைந்த ஊதியத்தில் பணியாற்றுவதற்காக சென்றுள்ளனர். குடும்ப நலன்களைக் கருத்தில் கொண்டு அவர்களை விரைந்து மீட்க வேண்டியது மிகவும் அவசரமும், அவசியமும் ஆகும்.
மாலி நாட்டில் இராணுவ ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் அதன் அதிகாரிகளை தொடர்பு கொண்டு தீவிரவாதிகளுடன் பேச்சு நடத்தி 5 தமிழர்களையும் விரைந்து மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
தீவிரவாதிகளால் தமிழர்கள் கடத்தப்பட்டிருப்பது ஒரு கொடிய உண்மையை உணர்த்தியிருக்கிறது. அல்கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய ஆயுதம் தாங்கிய குழுக்கள் பிணைத் தொகை கேட்டு வெளிநாட்டு தொழிலாளர்களை துப்பாக்கி முனையில் கடத்துவதும், அவர்களைக் கொடுமைப்படுத்துவதும் மாலி நாட்டில் இயல்பாக நடைபெற்று வருகின்றன. இந்த உண்மைகள் எல்லாம் தெரிந்திருந்தும் மிகக் குறைந்த ஊதியத்திற்கு தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் அங்கு வேலைக்கு சென்றிருக்கிறார்கள் என்றால், தமிழ்நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் எந்த அளவுக்கு தலைவிரித்தாடுகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
மாலி நாட்டில் கடத்தப்பட்ட தமிழர்களை மீட்பது மட்டுமின்றி, தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆபத்தான நாடுகளுக்கு குறைந்த ஊதியம் கொண்ட பணிகளுக்கு செல்லும் நிலையைத் தவிர்க்க தமிழ்நாட்டில் கண்ணியமான வேலைவாய்ப்புகளை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்
Hindusthan Samachar / P YUVARAJ