Enter your Email Address to subscribe to our newsletters


கோவை, 10 நவம்பர் (ஹி.ச.)
கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தடாகம், நஞ்சுண்டாபுரம், வரப்பாளையம், தாளியூர் உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகளவு உள்ளது.
நாள்தோறும் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் விளை நிலங்களை சேதப்படுத்தி வருகிறது. இதனால் விவசாயிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர்.
கடந்த சில தினங்களாகவே தடாகம் அடுத்த பன்னீர்மடை, வரப்பாளையம் பகுதியில் ஒற்றைக் காட்டு யானை ஊருக்குள் உலாவி வருவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்து உள்ளனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை சுமார் மூன்று முப்பது மணி அளவில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை வரப்பாளையம் ஊருக்குள் நுழைந்துள்ளது.
இதனால் தெரு நாய்கள் அனைத்தும் குறைத்த நிலையில் தோட்டத்து வீட்டில் இருந்த நபர் வெளியில் வந்து டார்ச் அடித்து பார்த்துள்ளார்.
அப்பொழுது ஒற்றை காட்டு யானை அவரை நோக்கி வேகமாக வந்ததால் அவர் அச்சமடைந்து ஓடி உள்ளார். அந்த காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில் தற்போது அந்த காட்சிகள் வெளியாகி உள்ளது.
அதனை தொடர்ந்து அந்த காட்டு யானை அப்பகுதியில் பல்வேறு வாழை மரங்களை சேதப்படுத்தி சென்றுள்ளது.
இது தொடர்ந்து நடைபெற்று வருவதால் வனத்துறை இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டுமென அப்பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
Hindusthan Samachar / V.srini Vasan