Enter your Email Address to subscribe to our newsletters

திருச்சி, 10 நவம்பர் (ஹி.ச.)
தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று (நவ.10) திருச்சி, பொன்மலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் மூத்த குடிமக்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்காக ‘அன்புச் சோலை’ மையங்கள் ஒரு மாநகராட்சியில் இரண்டு வீதம் 10 மாநகராட்சிகளில் 20 மையங்கள், சென்னை பெருநகராட்சியில் 3 மையங்கள் மற்றும் தொழில் மாவட்டங்களான ராணிப்பேட்டை மற்றும் கிருஷ்ணகிரியில் 2 மையங்கள் என மொத்தம் 25 ‘அன்புச் சோலை’ மையங்களை தொடங்கி வைத்தார்.
முதியவர்கள் அமைதியான, கண்ணியமான மற்றும் நிறைவான வாழ்க்கையை நடத்துவதை உறுதி செய்து, அத்தியாவசிய வசதிகளை வழங்குவதே இத்திட்டங்களின் நோக்கம் ஆகும்.
தமிழகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் மூத்த குடிமக்களின் ஒட்டுமொத்த நல்வாழ்வை உறுதி செய்வதற்காக ஒரு மாநகராட்சியில் இரண்டு அன்புச் சோலைகள் வீதம், மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, சேலம், திருப்பூர், ஈரோடு, தூத்துக்குடி, வேலூர், தஞ்சாவூர் மற்றும் திண்டுக்கல் ஆகிய 10 மாநகராட்சிகளில் 20 அன்புச் சோலைகள் அமைக்கப்படுகின்றன.
மேலும், 2 தொழில் துறை மாவட்டங்களான ராணிப்பேட்டை மற்றும் கிருஷ்ணகிரி, பெருநகர மாநகராட்சியான சென்னையில் தண்டையார் பேட்டை, சோழிங்கநல்லூர் மற்றும் விருகம்பாக்கம் ஆகிய மூன்று இடங்களில் ‘அன்புச் சோலை’ மையங்கள் தொடங்கப்பட்டு, இயன்முறை மருத்துவ சேவைகள் (Physiotherapy), யோகா, பொழுது போக்கு அம்சங்கள் மற்றும் நூலகம் போன்றவை வழங்கப்படவுள்ளன.
அந்த வகையில் மூத்த குடிமக்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்காக திருச்சியில் இன்றைய தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில், 25 அன்புச் சோலை மையங்களை காணொலி வாயிலாக முதல்வர் தொடங்கி வைத்து, மூத்த குடிமக்களுக்கு மகளிர் சுய உதவிக் குழுவினரால் தயாரிக்கப்பட்ட சிறு தானிய உணவு வகைகள் மற்றும் சத்துமாவு கொண்ட பெட்டகங்களை வழங்கி, அவர்களுடன் கலந்துரையாடி, கேரம் விளையாடினார்.
இந் நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.என்.நேரு, ரகுபதி, கீதா ஜீவன், எஸ்.எஸ்.சிவசங்கர், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மெய்யநாதன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருச்சி சிவா, ஆ.ராசா, துரை வைகோ, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Hindusthan Samachar / vidya.b