Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 10 நவம்பர் (ஹி.ச)
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான சிறப்பு நீதிமன்ற விசாரணையில் முடிவெடுக்கும் வரை சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கை விசாரிக்க கூடாது என தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு நவம்பர்24 ம் தேதிக்குள் அமலாக்கத்துறை பதிலளிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த வழக்கு சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.
இந்த வழக்கின் அடிப்படையில் சட்ட விரோத பணப்பரிமாற்றம் செய்ததாக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, அவரது சகோதரர் அசோக் குமார் உள்ளிட்டோருக்கு எதிராக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது.
இந்த வழக்கில் சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உதவியாளர் கார்த்திகேயன், கணேசன் உள்ளிட்ட இருவர் சிறப்பு நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கில் முடிவெடுக்கும் வரை அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கை விசாரிக்க கூடாது, விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கு முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, இதய சிகிச்சைக்காக அமெரிக்க சென்ற அவரின் சகோதரர் அசோக்குமார் உள்ளிட்ட 11 பேர் நேரில் ஆஜராகியிருந்தார்.
அப்போது அமலாக்கத்துறை தரப்பில் சாட்சி விசாரணையை தள்ளி வைக்க கோரிய மனு தொடர்பாக பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
இதையடுத்து உத்தரவிட்ட நீதிபதி மனுவுக்கு பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு கால அவகாசம் வழங்கி வழக்கின் விசாரணையை நவம்பர் 24 ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
Hindusthan Samachar / P YUVARAJ