70 வயது பூர்த்தியடைந்த மூத்த தம்பதிகளுக்கு சிறப்பு செய்யும் திட்டம் - துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்
சென்னை, 10 நவம்பர் (ஹி.ச.) இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் மணி விழா கண்ட 70 வயது பூர்த்தியடைந்த ஆன்மிக ஈடுபாடு உள்ள 100 தம்பதியர்கள் வீதம் 20 இணை ஆணையர் மண்டலங்களில் 2,000 தம்பதியருக்கு திருக்கோயில்கள் சார்பில்
70 வயது பூர்த்தியடைந்த மூத்த தம்பதிகளுக்கு சிறப்பு செய்யும் திட்டம் - துணை முதல்வர் இன்று தொடங்கி வைத்தார்


சென்னை, 10 நவம்பர் (ஹி.ச.)

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் மணி விழா கண்ட 70 வயது பூர்த்தியடைந்த ஆன்மிக ஈடுபாடு உள்ள 100 தம்பதியர்கள் வீதம் 20 இணை ஆணையர் மண்டலங்களில் 2,000 தம்பதியருக்கு திருக்கோயில்கள் சார்பில் சிறப்பு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று (10.11.2025) திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி திருக்கோயிலில் சென்னை இணை ஆணையர் மண்டலங்களை சேர்ந்த 70 வயது பூர்த்தியடைந்த 200 மூத்த தம்பதிகளுக்கு சிறப்பு செய்து, இத்திட்டத்தை தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு முழுவதும் இத்திட்டத்தின் கீழ், 2,000 மூத்த தம்பதியினர் சிறப்பு செய்யப்பட்டனர்.

இத்தம்பதியினருக்கு ரூ. 2,500 மதிப்பிலான வேட்டி மற்றும் சட்டை, புடவை, இரவிக்கை, பழ வகைகள், மஞ்சள், குங்குமம், கண்ணாடி வளையல் உள்ளிட்ட மங்கலப் பொருட்கள் மற்றும் சுவாமி படம் ஆகியவை வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின், அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோயில் சார்பில் திருவல்லிக்கேணி, நல்லத்தம்பி தெருவில் ரூ. 2.05 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள துணை ஆணையர்/செயல் அலுவலர் மற்றும் கண்காணிப்பாளர் குடியிருப்புகளையும், பார்த்தசாரதி தெருவில் ரூ. 1.35 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பணியாளர் குடியிருப்பினையும் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சிகளில் தவத்திரு ஆதீன பெருமக்கள், பெருநகர மாநகராட்சி மேயர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Hindusthan Samachar / vidya.b