தாராபுரத்தில் சாலை பணியாளர்கள் கண்களில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்!
திருப்பூர், 10 நவம்பர் (ஹி.ச.) திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கத்தின் சார்பில், சாலைப் பணியாளர்களின் 41 மாத பணிநீக்கக் காலத்தை சென்னை உயர்நீதிமன்ற ஆணைப்படி பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும் என வலிய
Black Badge


திருப்பூர், 10 நவம்பர் (ஹி.ச.)

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கத்தின் சார்பில், சாலைப் பணியாளர்களின் 41 மாத பணிநீக்கக் காலத்தை சென்னை உயர்நீதிமன்ற ஆணைப்படி பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஏ.வா. வேலு ஆகியோரை கண்டித்து பெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தாராபுரம் அலங்கியம் சாலையில் உள்ள நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்நிகழ்வில், சாலைப்பணியாளர்கள் கண்ணில் கருப்பு துணி கட்டியும், கையில் நீதி தராசை ஏந்தியும், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கும்மியடித்து, ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் கலந்து கொண்ட பணியாளர்கள், “திமுக அரசு கடந்த தேர்தலில் வெற்றி பெற்றால் சாலைப்பணியாளர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும்” என வாக்குறுதி அளித்திருந்ததை நினைவூட்டியபடி, “ஆனால் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இதுவரை எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் சாலைப்பணியாளர்களின் வாக்குகளை நாட விரும்பினால், எங்களது நீண்ட நாள் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்” என வலியுறுத்தினர்.

இந்நிகழ்வுக்கு கோட்டத் தலைவர் ரங்கசாமி தலைமை வகித்தார். துணைத் தலைவர் தங்கவேல் முன்னிலை வகித்தார். கோட்டச் செயலாளர் தில்லையப்பன் விளக்க உரையாற்றினார். பொதுச் செயலாளர் அம்சராஜ் நிறைவு உரையாற்றினார்.

பணியாளர்களின் முக்கிய கோரிக்கைகள்:

சாலைப்பணியாளர்களின் 41 மாத பணிநீக்கக் காலத்தை சென்னை உயர்நீதிமன்ற ஆணையின்படி பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும்.

அதற்கெதிராக அரசால் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.

உயர்நீதிமன்றத்தின் ஆணையை உடனடியாக அமுல்படுத்தி, மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை கலைத்து, நெடுஞ்சாலை பராமரிப்பு பணிகளை அரசு நேரடியாக ஏற்று நடத்த வேண்டும்.

கிராமப்புற இளைஞர்களுக்கு சாலைப்பணியாளராக பணி நியமனம் வழங்க வேண்டும்.

கருணை அடிப்படையில் பணி நியமனம் கோரி விண்ணப்பித்து காத்திருக்கும் சாலைப்பணியாளர் குடும்பத்தினருக்கு விரைந்து பணிநியமனம் வழங்க வேண்டும்.

தொழில்நுட்பக் கல்வித் திறன் பெறாத சாலைப்பணியாளர்களுக்கு ரூ.5,200 – 20,200 ஊதிய அளவிலும், தர ஊதியம் ரூ.1,900 ஆக உயர்த்தி வழங்க வேண்டும்.

தொடர்ந்து தங்கள் கோரிக்கைகள் நிறைவேறாததற்காக சாலைப்பணியாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும், தாராபுரம், மூலனூர், மடத்துக்குளம், உடுமலைப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 100க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Hindusthan Samachar / ANANDHAN