Enter your Email Address to subscribe to our newsletters

பமாகோ, 10 நவம்பர் (ஹி.ச.)
கடந்த நவ.,6ம் தேதி மேற்கு மாலியில் உள்ள கோப்ரி அருகே தனியார் நிறுவனம் ஒன்றில் நுழைந்த ஆயுதம் ஏந்திய கும்பல் ஒன்று துப்பாக்கியைக் காட்டி மிரட்டி அங்கிருந்த ஐந்து இந்தியர்களை கடத்திச் சென்றனர்.
இவர்கள் மாலி மின்மயமாக்கல் திட்டத்திற்காக வேலைக்குச் சென்றவர்களாவர்.
கடத்தப்பட்டவர்கள் 5 பேரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் புதியவன்,52, பொன்னுதுரை,41, பேச்சிமுத்து,42,இசக்கிராஜா,36, சுரேஷ்,26, என தெரிய வந்துள்ளது.
கடத்தலுக்கு உடனடியாக எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
அரசுக்கு எதிரான செயல்களில் ஈடுபடும் அல் - குவைதாவுடன் தொடர்புடைய ஜே.என்.ஐ.எம்., என்ற முஸ்லிம் ஆதரவு குழு இந்த கடத்தலில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இதனிடையே, கடத்தப்பட்டவர்களை உடனடியாக மீட்க வேண்டும் என்று அவர்களின் குடும்பத்தினர் பிரதமர் மோடி மற்றும் முதல்வர் ஸ்டாலின் ஆகியோருக்கு கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில், கடத்தப்பட்ட 5 இந்தியர்களை பாதுகாப்பாக மீட்பதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாலியில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்திய தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கடந்த நவ.,6ம் தேதி மாலியில் 5 இந்தியர்கள் கடத்தப்பட்டுள்ளனர்.
அவர்களை பாதுகாப்பாகவும், விரைவாகவும், மீட்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதற்காக, மாலி அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனத்துடன் இந்திய தூதரகம் தொடர்ந்து பேசி வருகிறது.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b